Advertisment

சமையல் கலையில் வெற்றி பெற்றாரா? - ‘அன்னபூரணி’ விமர்சனம்!

Annapoorani Movie review

Advertisment

லாக் டவுனுக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு அதிகமான காலகட்டத்தில் சமையல் குறித்த ஆன்லைன் சேனல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சிகளிலும் சமையல் குறித்த நிகழ்ச்சிகள் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ஹிட் அடித்தன. இப்படி குக்கிங் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் சமீப காலங்களாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சினிமாவிலும் சமையல் கலை குறித்த பொழுதுபோக்கு அம்சத்தை அன்னபூரணி படம் கொண்டு வந்துள்ளது. சமையல் கலை குறித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பெற்ற அதே வரவேற்பை தற்போது ரிலீசாகி இருக்கும் அன்னபூரணி படமும் பெற்றுள்ளதா, இல்லையா? என்பதை பார்ப்போம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாதம் சமைக்கும் பிராமண சமையல்காரரான அச்யுத்குமாரின் மகள் நயன்தாராவுக்கு சிறுவயது முதலே மற்றவர்களை காட்டிலும் நாவில் ருசி அறியும் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் அவர் வளர்ந்த பின் தான் இந்தியாவின் மிகப்பெரிய செப் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்கிறார். நம் நாட்டின் மிகப்பெரிய சமையல் நிபுணராக மாற வேண்டும் என்றால் அசைவம் சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிராமண பெண்மணியான நயன்தாராவிற்கு ஏற்படும் என்ற ஐயத்தில் நயன்தாராவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் அவரது தந்தை அச்யுத் குமார். இதையடுத்து தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தந்தைக்குத் தெரியாமல் கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து சமையல் கலை மாணவராக கல்வி பயில்கிறார். இதைத்தொடர்ந்து தன் லட்சியத்தில் நயன்தாரா வெற்றி பெற்று மிகப்பெரிய செப் ஆனாரா, இல்லையா? அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா, இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் மீதி கதை.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடமிருந்து வெளியே வந்திருக்கும் அடுத்த உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா சங்கரின் முன்னாள் சிஷ்யர்களை போல் முதல் பாலிலேயே சிக்சர் அடித்திருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது ஒரு சிம்பிளான கதையாக இருந்தாலும், இதுவரை நாம் சினிமாவில் பார்த்திடாத மக்களுக்கும் அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு சமையல் கலை குறித்த கதையை இன்றைய டிரெண்டிற்கு ஏற்றவாறு ரசிக்கும்படி கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் திருப்பங்கள் இல்லாமல் ஒரே சீராக நாம் புத்தகத்தில் ஒரு கதையை ஒவ்வொரு பக்கமாக பிரித்து படிக்கும் பொழுது என்ன உணர்வு ஏற்படுமோ, அதுபோல் திரைக்கதை அமைத்து மொத்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா.

Advertisment

ஒரு கதையாக நாம் கேட்கும் பொழுது எந்த அளவு நமக்கு சுவாரசியம் கிடைக்குமோ அதே அளவு சுவாரஸ்யம், திருப்பங்கள் இல்லாத இந்த திரைக்கதையிலும் கிடைத்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் மேக்கிங் சங்கரின் இன்றைய கால உதவியாளர்களிடம் எந்த அளவு உயர்தரமான ஹாலிவுட் தர மேக்கிங் இருக்குமோ அதே அளவான தரமான மேக்கிங் இந்தப் படத்திற்கும் கொடுத்து இந்த படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார் நிலேஷ். அதுவே இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. பொதுவாக திருப்புமுனை இல்லாத திரைக்கதைகள் பெரும்பாலும் ரசிக்க முடியாதபடி இருக்கும். ஆனால் மாறாக இந்த படத்தில் அப்படியான திரைக்கதை அமைந்தும், அவை ரசிக்கும்படி அமைந்தது இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் படி கண்கலங்க வைக்கும் சென்டிமென்ட் காட்சி அமைப்புகள் இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதும் இந்த படத்திற்கு இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும், ஆங்காங்கே சில இடங்களில் மிகைப்படுத்தும் படியான காட்சி அமைப்புகளும், சில கிளிஷேவான காட்சி அமைப்புகளும் பல இடங்களில் தென்பட்டாலும் படத்தில் சொல்ல வந்த கருத்து மக்களிடையே ஆழமாக போய் பதியும்படி சொல்லி இருப்பது படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறது.

நாயகன், நாயகி என இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே ஒரு ஆளாக தன் தோள்மேல் சுமந்திருக்கும் நயன்தாரா, தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்தில் சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கைதட்டல் பெற்றிருக்கிறார். படத்தில் நயன்தாராவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கமர்சியல் படங்களில் நாயகிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் இந்த படத்தில் ஜெய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் படம் முழுவதும் ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் வந்து நாயகிக்கு சப்போர்ட் மட்டும் செய்துவிட்டு சென்று விடுகிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை.

ஆனால் நாயகி நயன்தாராவோ படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மொத்த படத்தையும் ஒருவரே தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவரது கேரியரில் இது ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. நயன்தாராவின் அப்பாவாக வரும் அச்யுத்குமார் அக்மார்க் பிராமண அப்பாவாகவே மாறி இருக்கிறார். இன்னமும் மாறாமல் பழைய பஞ்சாங்கம் பேசிக் கொண்டிருக்கும் பழைய பெருசுகளின் முகத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நயன்தாராவின் பாட்டியாக நடித்திருக்கும் சச்சு சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி தன் அனுபவநடிப்பால் கவர்கிறார். ரெடின் கிங்ஸ்லியும் சில காட்சிகளில்வந்துசிரிக்க வைத்து சென்று இருக்கிறார். நயன்தாராவின் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். அவர் காட்டும் சின்ன சின்ன முகபாவனைகள் வசன உச்சரிப்புகள் கூட சிறப்பாக அமைந்திருக்கிறது. நயன்தாராவின் தோழியாக நடித்திருக்கும் பிக் பாஸ் பூர்ணிமா சில காட்சிகளே வந்தாலும் அவருக்கான வேலையை செய்துவிட்டு சென்று இருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த செப்பாக நடித்திருக்கும் சத்யராஜ், நாயகி நயன்தாராவிற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கும் நயன்தாராவுக்குமான கெமிஸ்ட்ரி ராஜா ராணி படத்தை நினைவு படுத்துகிறது. சிறிய வேடத்திலேயே வந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் மனதில் பதியும் படி நடித்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

தமன் இசையில் கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட பாடல்கள் மனதை வருடி இருக்கின்றன. ஆனால் அவை மனதில் பதியும் படி இல்லை. ஆனாலும் பின்னணி இசையில் விட்டதை பிடித்திருக்கிறார். முக்கியமான சென்டிமென்ட் காட்சிகளிலும், சமையலில் மாஸ் காட்டும் காட்சிகளிலும் சிறப்பான பின்னணி இசை கொடுத்து கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் ஏற்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். இந்தப் படத்தின் மிகப்பெரிய இன்னொரு பிளஸ் எதுவென்றால் இவரது ஒளிப்பதிவு என்று கூறலாம். அந்த அளவு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.குறிப்பாக சமையல் மேக்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு புதிதான சிம்பிள் கதையை வைத்துக்கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதையாக இந்த படம் உருவாகி இருந்தாலும், அவை ரசிக்கும்படி அமைந்து கூடவே படத்தின் மேக்கிங் மிகவும் உலகத்தரமாக அமைந்து இருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக நயன்தாராவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படம் முழுவதும் சிறப்பாக அமைந்திருப்பது இந்த படத்தை நெகிழ்ச்சியான ஒரு திரைப்படமாக மாற்றி வெற்றி பெற்று இருக்கிறது.

அன்னபூரணி - சமையல் ராணி!

moviereview Nayanthara annapoorani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe