பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை தொடர்ந்து பான் இந்திய படமாக வெளியான புஷ்பா முதல் பாகம் உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது. படத்தில் இடம் பெற்ற பஞ்ச் வசனங்கள், பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என படம் முழுவதும் மசாலாவாக அமைந்து பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய புஷ்பா 2 திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா?
முதல் பாகத்தில் வெறும் கூலிக்காரனாக இருக்கும் புஷ்பராஜ் எப்படி பெரும் சிண்டிகேட்டுக்கு தலைவனாகிறார் என்பது போல் முதல் பாகம் முடியும். இந்த இரண்டாம் பாகத்தில் சிண்டிகேட் தலைவராக இருக்கும் புஷ்பராஜ் தன் மனைவி ஆசைப்படி முதலமைச்சருடன் போட்டோ எடுக்க அவரைப் பார்க்க செல்கிறார். போன இடத்தில் அவரை சி.எம். அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பா, ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரையே மாற்றி தனக்கு தோதான ஒரு முதலமைச்சரை அந்த சீட்டில் உட்கார வைக்க முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் இவர் செம்மரம் கடத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என போராடுகிறார், ஐபிஎஸ் போலீஸ் ஆபீஸர் ஃபகத் ஃபாசில். அவரிடம் இருந்து தன் செம்மரங்களை காப்பாற்றி தான் நினைத்த நபரை புஷ்பா முதலமைச்சராக ஆக்கினாரா, இல்லையா? என்பதே புஷ்பா 2 படத்தின் மீதி கதை.
கிட்டத்தட்ட இப்படத்தின் கதாநாயகனான புஷ்பா கதாபாத்திரத்தை உற்று நோக்கினால், நக்கீரனில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் தொடரில் ஆட்டோ சங்கரின் குணாதிசயங்களை அப்படியே உல்டா செய்து உருவாக்கி இருப்பார்கள். அந்த கதாபாத்திரத்துக்கு சற்றே உப்பு, காரம், புளிப்பு ஆகிய மசாலாக்களை சேர்த்து கொஞ்சம் கமர்சியல் அம்சங்களோடு மெருகேற்றி உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்த புஷ்பா சீரிஸ். ஒரிஜினல் ஆட்டோ சங்கர் செய்த தொழில் வேறு புஷ்பா செய்த தொழில் வேறு, அவ்வளவே இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம். ஆந்திராவில் செம்மர கடத்தலின் மன்னனாக மாறி சிண்டிகேட்டுக்கு தலைவராக இருக்கும் புஷ்பராஜ் கதாபாத்திரத்தை மிகவும் மாசாகவும் இந்த காலகட்ட ரசிகர்களுக்கு ஏற்ப மிக பிரம்மாண்டமான பான் இந்தியா படமாகவும் உருவாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் இயக்குநர் சுகுமார். முதல் பாகத்தில் இருந்த நக்கல், நையாண்டி, காதல், ஆக்சன், மாஸ் சீக்குவன்ஸ் அனைத்துமே இந்த படத்தில் அப்படியே இருக்கிறது. அதோடு பிரம்மாண்டமும் இணைந்து கொண்டு இப்படத்தை ஒரு வெற்றி படமாக மாற்றி இருக்கிறது.
புஷ்பராஜுக்கே உண்டான குசும்பு, நையாண்டி, தைரியம், அதிரடி ஆக்சன் என படம் முழுவதும் புஷ்பா என்ற பிராண்டை படர் செய்து ரசிகர்களுக்கு ராஜ விருந்து அளித்திருக்கிறார் இயக்குநர் சுகுமார். காட்சிக்கு காட்சி கூஸ்பம்ஸ் மொமெண்ட்ஸ் படம் முழுவதும் படர்ந்து இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து தியேட்டரை கைதட்டல்களால் அதிர செய்கிறது. அதற்கு ஏற்றவாறான காதல் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மாஸ் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட மூணு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் கடைசி 20 நிமிடங்கள் மட்டுமே சற்று தொய்வாக அமைந்து பார்ப்பவர்களுக்கு லேசான அயற்சியை கொடுத்திருக்கிறது. முழுக்க முழுக்க சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படத்தின் கிளைமாக்ஸ் பெண்களுக்காகவும் குடும்ப ரசிகர்களுக்காகவும் மட்டுமே உருவாக்கியது போல் தெரிகிறது. அவர்களை குறிவைத்து மட்டுமே அந்த காட்சிகள் எடுத்திருப்பதால் அவர்கள் அந்த காட்சியுடன் நன்றாக ஒத்துப் போய் ரசிக்கின்றனர். மற்றபடி மூன்று மணி நேரம் படம் போவதே தெரியாமல் வேகமாகவும் மாசாகவும் சென்று ஒரு பக்கா கமர்சியல் மாஸ் பான் இந்தியா படமாக வெற்றி பெற்று இருக்கிறது.
வழக்கம்போல் மாஸ் காட்சிகளிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் டான்ஸ் காட்சிகளிலும் அதகலப்படுத்தி இருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா என்றால் ஃபயர் இல்லை வைல்ட் ஃபயர் என கூறும் அவருக்கு இந்த புஷ்பா இரண்டாம் பாகம் உண்மையிலேயே வைல்ட் ஃபயராக மாறி வெற்றி பெற்று இருக்கிறது. தனக்கு என்ன வருமோ அந்த மாஸ் எலிமெண்ட்ஸை அப்படியே படத்தில் உட்புகுத்தி காட்சிகளுக்கு காட்சி சிறப்பாக கொடுத்து அதற்கு ஏற்றார் போல் சிறப்பாக நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் அல்லு அர்ஜுன். ரசிகர்கள் இந்த படத்தில் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே இப்படத்தில் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். லாஜிக் எல்லாம் பார்க்காமல் வெறும் மேஜிக் கமர்சியல் அம்சங்களுக்காக மட்டுமே இப்படத்தை பார்ப்பவர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது. அதற்கு அல்லு அர்ஜுன் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் மிகவும் அழகாக தெரிகிறார். அம்சமாக இருக்கிறார். மாஸ் டயலாக் பேசி கலக்கலான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து தியேட்டரில் கைதட்டல்களை அள்ளி இருக்கிறார். இவருக்கும் அல்லு அர்ஜுனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.
வழக்கம்போல் மங்கலம் சீனுவாக வரும் சுனில் அனுசையா பரத்வாஜ் ஆகியோர் கடமைக்கு வந்து செல்கின்றனர். வில்லன் ஃபகத் ஃபாசில் அந்த அளவு மிரட்டல் வில்லனாக இல்லாமல் இருந்தாலும் தனக்கு ஏற்றார் போல் வரும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்து மாஸ் காட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் மிகவும் கெத்தாக வரும் இவர் போக போக காமெடி பீஸாக மாறி முடிவில் அவருக்கு அவரே முடிவு தேடிக்கொள்ளும் காட்சிகளில் மட்டும் சற்றே ஏமாற்றம் அளிப்பது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கும் புஷ்பாவுக்குமான காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராவ் ரமேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்து படத்துக்கு மாஸ் கூட்டி இருக்கின்றனர். உடனடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
படத்தின் இன்னொரு நாயகன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் மிகப்பெரிய வெற்றி அடைய செய்ய உதவி இருக்கிறது. எந்தெந்த இடங்களில் மாஸ் தேவையா அந்தந்த இடங்களில் கலக்கலான இசையை கொடுத்து தியேட்டரில் கைதட்டல்களையும், விசில்களையும் பறக்க விட செய்து இருக்கிறார். இவர் இசையில் வரும் பாடல்கள் அனைத்துமே துள்ளல் ரகம். கூடுதல் பின்னணி இசை அமைத்திருக்கும் சாம் சி எஸ் க்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. பொதுவாக சத்தமான இசையே கொடுத்து காதுகளை கிர் என்று ஆகும் சாம்.சி.எஸ் இந்த படத்தில் அதற்கு ஏற்றமான ஒரு கதை இருப்பதால் சிறப்பான இசையை சத்தமாகவே கொடுத்து ரசிக்க வைத்திருகிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த மிரோஸ்லா தனது ஹாலிவுட் தர ஒளிப்பதிவின் மூலம் ஆக்சன் காட்சிகளை மிக மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட் தரத்தில் கொடுத்து ரசிகர்களின் சில்லறையை சிதற விட செய்திருக்கிறார். குறிப்பாக காட்சிகள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பாக ஆக்சன் காட்சிகள் மிகமிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது.
லாஜிக் எல்லாம் மறந்துவிட்டு வெறும் மேஜிக்கை மட்டும் நம்பி குடும்பத்துடன் சென்று ஒரு கமர்சியல் படம் பார்க்கும் எண்ணத்துடன் தியேட்டரில் நுழையும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ராஜ விருந்தாக அமைந்திருக்கிறது. புஷ்பா முதல் பாகம் எந்த அளவு வரவேற்பை பெற்றதோ அதே அளவான வரவேற்பை இந்த படமும் பெற்றிருக்கிறது. படத்தின் நீளம் மட்டும் சற்றே மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் படத்தின் வேகமும் திரைக்கதை யுக்தியும் அதை மறக்கடிக்க செய்து ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
புஷ்பா 2 - காட்டுத்தீ!