/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alangu-art.jpg)
மனிதனுக்கும் நாய்க்குமான பாசப் பிணைப்பை வைத்து பல்வேறு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் நோக்கில் தற்பொழுது அதேபோன்ற ஒரு ஜானரில் அலங்கு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. நாய்க்கும் மனிதனுக்குமான உறவை மையப்படுத்தி கேரளா பேக்ரவுண்டில் நடக்கும் ஒரு வித்தியாசமான கதையாக இப்படத்தை உருவாக்கி வெளியாகி இருக்கும் அலங்கு எந்த அளவு வரவேற்பை பெற்றது?.
ஒரு மலைக் கிராமத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும் குணாநிதி தன் குடும்ப கடனை அடைப்பதற்காக கேரளாவுக்கு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய தனது அன்பான வளர்ப்பு நாயை கூட்டிக்கொண்டு செல்கிறார். போன இடத்தில் இவர்களின் முதலாளி செம்பண் வினோத் அவர்களின் மகளை ஒரு நாய் கடித்து விடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செம்பண் வினோத் குரூப் ஊரில் உள்ள அனைத்து நாய்களையும் கொன்று குவிக்கின்றனர். அதில் நாயகன் குணாநிதி நாயும் மாட்டிக் கொள்கிறது. அந்த நாயை காப்பாற்ற குணாநிதி போராடுகிறார். அப்பொழுது ரவுடி சரத் அப்பானியின் கையை அவர் வெட்டி விடுகிறார். இதனால் பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது. குணாநிதி அவர் நாய் மற்றும் நண்பர்கள் அந்த ஊரை விட்டு தப்பித்து ஓடுகின்றனர். செம்பன் வினோத் குரூப் அவர்களை தேடி கொல்லமுயற்சிக்கிறது. வில்லன் கும்பலிடம் இருந்து தன்னையும், தன் நாயையும் குணாநிதி காப்பாற்றினாரா இல்லையா என்பதே அழகு படத்தின் மீதி கதை.
மனிதனுக்கும் வீட்டு விலங்குக்குமான பாசப்பிணைப்போடு கதையை ஆரம்பித்த இயக்குநர் எஸ் பி சக்திவேல் போகப்போக கதையை வேறு ஒரு கோணத்தில் பயணிக்க செய்து ஒரு பழிவாங்கும் கதையாக இப்படத்தை கொடுத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் குடும்பம், பாசம் என ஆரம்பித்து போகப் போக சண்டை, சேசிங், பழிவாங்கல் போன்ற விஷயங்களோடு முடிகிறது. முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்ந்து காட்டினுள் பயணிக்கிறது. மனிதனுக்கும் விலங்குக்குமான பாசப்பிணைப்பாக உருவாக்க நினைத்திருக்கும் இயக்குநர் ஏனோ தடம் மாறி பழிவாங்கும் கதைக்களத்தில் புகுந்திருக்கிறார். அது ரசிகர்களை ஓரளவுக்கு ரசிக்க வைத்தாலும் மையக் கதையை விட்டு படம் விலகுவது மட்டும் சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் குணாநிதி பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கோபக்கார இளைஞராக வரும் அவரின் மிடுக்கான தோற்றமும், அளவான வசன உச்சரிப்பும் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக காட்டி இருக்கிறது. படத்தின் வில்லனாகவும் இன்னொரு ஹீரோவாகவும் வருகிறார் சரத் அப்பாணி. துடுக்கான வில்லனுக்கான அனைத்து அம்சங்களையும் மிக மிக எதார்த்தமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். பெரிய வில்லனாக வரும் செம்பண் வினோத் தன் மகளுக்காக உருகும் இடத்தில் கவர்கிறார். அவரது மகளாக வரும் சிறுமியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குணா நிதியின் அம்மாவாக வரும் நடிகை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகள் அதகலப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட் வழக்கம் போல அந்த கதாபாத்திரமாகவே மாறி கைதட்டல் பெற்று இருக்கிறார். தன் மகள் குறித்து பேசும் இடத்தில் அப்படியே உருகி பார்ப்பவர்களையும் கலங்கடித்து இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாகச் செய்து கவனம் பெற்று இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவில் கேரள எல்லை சம்பந்தப்பட்ட காடும் அதை சுற்றியுள்ள இடங்களின் காட்சிகளும் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் அஜிஷ் இசையில் பாடல்கள் ஓகே பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. விலங்கிற்கும் மனிதனுக்குமான பாச பிணைப்பாக இருக்குமோ என்று எண்ண வைத்த இத்திரைப்படம் அதைத் தாண்டி வேறு ஒரு திசைக்கு சென்று பழிவாங்கும் படமாக முடிந்திருப்பது மட்டும் சற்றே பின்னடைவாக இருந்தாலும் காட்சி அமைப்புகளும் அதை சுற்றி இருக்கும் கதை நடக்கும் இடங்களும் நம்மை ஓரளவு கவர்ந்து இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
அலங்கு - ஆக்ரோஷம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)