Skip to main content

இது பெண்களுக்கான படமில்லை! நேர்கொண்ட பார்வை - விமர்சனம்

Published on 09/08/2019 | Edited on 10/08/2019

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்...' எனத் தொடங்கும் புதுமைப் பெண்கள் குறித்த பாரதியின் வார்த்தைகளை விட இந்தப் படத்துக்குப் பொருத்தமான டைட்டில் கிடைக்காது. காலம்தோறும் தமிழ் சினிமா பெண்ணியம் பேசிவந்துள்ளது. வெகு சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோ அல்லது ஒழுக்கமான ரௌத்திரமான நாயகிகள் ஆண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோதான் அமைந்திருந்தன. 'பொண்ணுன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்' என்று சொல்லும் படங்களைப் பார்த்து வளர்ந்த நம்மை 'பெண் எப்படி இருந்தாலும் அவளிடம் அத்து மீற உனக்கு உரிமை இல்லை, அவள் 'நோ' சொன்னால் அதன் அர்த்தம் 'நோ'தான்' என்று நிற்க வைத்து நெற்றியில் அடித்துச் சொல்ல வந்திருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'.

 

ajith



பெரும் வரவேற்பை பெற்று, விவாதங்களைக் கிளப்பிய பாலிவுட் படமான 'பிங்க்'கின் அதிகாரப்பூர்வ ரீமேக் இந்த 'நேர்கொண்ட பார்வை'. 'பிங்க்' படத்தின் பெரும் பலம் அழுத்தமான கதையை விட்டு சற்றும் விலகாமல், கதைக்கு மேல் எதுவும் சேர்க்காமல், சொல்ல வந்த விஷயத்தை மிக நேரடியாகச் சொல்லும் வசனங்கள் கொண்ட அந்த பதம் செய்யப்படாத தன்மையும் (rawness). மூலச் செய்திக்கு உண்மையாக இருந்த திரைக்கதையும்தான். 'நேர்கொண்ட பார்வை'யும் அதே அளவு உண்மையாக இருக்கிறதா?

மூன்று வெவ்வேறு விதமான மிடில் க்ளாஸ் பின்னணியிலிருந்து வந்து சென்னையில் ஒன்றாகத் தங்கி பணிபுரியும் இளம் பெண்கள் மீரா கிருஷ்ணன், ஃபமீதா பானு மற்றும் ஆண்ட்ரியா தாரங். ஒரு இசை நிகழ்ச்சியின் முடிவில் ஃபமீதாவின் நண்பர் மூலம் அறிமுகமாகும் ஆதிக் மற்றும் அவனது நண்பர்களுடன் விருந்துக்குச் செல்லும் மீரா, ஃபாமி, ஆண்ட்ரியா மூவருக்கும் அங்கு நடக்கும் கசப்பான அனுபவம், அதன் பிறகு தொடரும் அச்சுறுத்தல்கள், அதிகாரம் மிகுந்தவர்களின் துரத்தல், அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே ஒரு கதையாக 'நேர்கொண்ட பார்வை'. அந்தக் கதையின் துணையோடு இந்த சமூகம், பெண்கள் குறித்து காலம் காலமாகக் கொண்டிருக்கும் கண்ணோட்டம், மனநிலை, அணுகுமுறை உள்ளிட்டவற்றை உடைத்து நமக்கு நடத்தப்படும் ஒரு பாடமாக இருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'.

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண், அணிந்திருந்த உடையைப் பொறுத்து நீதி சொல்லும் மனங்கள் நிறைந்த ஒரு சமூகத்திடம் "ஜீன்ஸ் டீ-ஷர்ட் அணிந்தாலும் சிரித்துப் பேசினாலும் உடனமர்ந்து மது அருந்தினாலும் அவள் மீது அத்துமீற உனக்கு உரிமை இல்லை" என்று அறிவுரை வசனங்களாக அல்லாமல் அழுத்தமான தர்க்கங்களால் பேசும் 'நேர்கொண்ட பார்வை' இந்தக் காலகட்டத்துக்கு மிக மிக அவசியமான படம். ஏன் இந்தக் காலகட்டத்துக்கு அவசியம்? இது பெண்கள் வெளியே வந்து, ஆண்களுக்கிணையாக சம்பாதிக்கும், ஆண்களுக்கிணையாக பொறுப்புகள் சுமக்கும், ஆண்களுக்கிணையாக மகிழ்ச்சி தேடும் காலம். பெண்கள் தங்கள் காதலை, காமத்தை, விருப்பங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கும் காலம். 'அது தவறு, அவர்கள் அப்படி இருக்கக்கூடாது, இன்னும் அவர்கள் ஆண்களுக்குக் கீழ்தான், வெளியே சுற்றுபவள் அறைக்குள்ளும் ஒத்துழைப்பாள்' என்ற எண்ணம் உள்ள ஆண்களும் கணிசமாக வாழும் காலம். இப்படி ஒரு டிரான்ஷிஷன் காலகட்டத்தில் "ஒரு பொண்ணு குடிச்சா அவ கேரக்டர் சரியில்ல, ஒரு பையன் குடிச்சா அது வெறும் உடல்நலத்துக்கு ஆபத்து மட்டுமா? குடி தப்புன்னா அதை யார் செஞ்சாலும் தப்புதான்" என்று எடுத்துச் சொல்லும் ஒரு ஜனரஞ்சகப் படம் அத்தியாவசியம்தான். இந்தப் பாடத்தை பள்ளியோ, பெற்றோரோ சொல்லாத இடத்தில் ஒரு படம் சொன்னால், அதை பாராட்ட வேண்டும். அறிமுகமோ, நட்போ, காதலோ, காமமோ வெளிப்படுத்தவும் மறுக்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதை ஆண்களுக்கு சொல்லித்தர வேண்டும்தானே? நட்பு, காதல் என்று நம்பி உடன் வந்த பெண்களை பிற காமுக வெறியன்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது, அவள் பண்டமல்ல, அவளை அடிக்கக்கூடாது, அதை வீடியோ எடுத்து மிரட்டக்கூடாது என்று பொள்ளாச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டிவனம், திருத்தணி, திருச்சி என தமிழகமெங்கும் அரங்கு அதிரப் பேசும் ஒரு படம் தேவைதானே?

 

 

shradha



என்றைக்கும் ஒரு திரைப்படம் முழுமையான சமூக மாற்றத்தை நிகழ்த்திவிடாது. ஆனால், ஒரு விவாதத்திற்கு விதையாக, ஒரு சின்ன மாற்றத்திற்கு முதல் கோடாக அமைந்தால் அந்தப் படம் கொண்டாடத்தக்கது. அந்த வகையில் 'பிங்க்', தமிழுக்கு வந்தது கொண்டாடத்தக்கது. அதுவும் அஜித் என்ற ரசிகர் கூட்டம் மிகுந்த மக்கள் அபிமானம் பெற்ற நடிகருடன் வந்தது இன்னும் அதிகமாகக் கொண்டாடத்தக்கது. இப்படி வருவதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது, அந்த ஆபத்து இந்தப் படத்துக்கும் நிகழ்ந்தே இருக்கிறது. ஆம், அஜித்திற்காக சேர்க்கப்பட்டுள்ள சண்டைக் காட்சியும் அந்த ஃபிளாஷ்பேக் பாடல் காட்சியும் கதைக்கு அவசியமில்லை. அதே நேரம் அவை இரண்டும் சேர்க்கப்பட்ட விதத்தில் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சாமர்த்தியம் தெரிகிறது. 'பிங்க்' படத்தில் இல்லாத அந்த இடைவேளை சண்டைக் காட்சி அஜித் ரசிகர்களுக்குப் பெரும் விருந்து. அந்த பதினைந்து நிமிடங்களும் அஜித் ரசிகர்களுக்குத்தான், அஜித் ரசிகர்களுக்கு மட்டும்தான். ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தரும் அந்த சண்டையும் அதைத் தொடர்ந்த 'என்னை பயமுறுத்துறவங்கள பயமுறுத்திதான் எனக்குப் பழக்கம்' ரீதியான பன்ச் வசனமும் கதையைப் பொறுத்தவரை கொஞ்சம் எல்லை மீறிய வன்முறைதான். (அடுத்த அஜித் - ஹெச்.வினோத் படத்தின் ட்ரெயிலரோ?) அது போலவே வித்யா பாலனுடனான ஃபிளாஷ்பேக் காட்சிகள்.

கதையை, திரைக்கதையை பெரிதாக மாற்றாமல், முக்கியமான வசனங்களையும் கூட அப்படியே பயன்படுத்தியது, இரண்டாம் பாதியில் பெரிய திசைதிருப்பல், சேர்த்தல் இல்லாமல் படத்தின் மையச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆகியவை ரீமேக் செய்த இயக்குனர் ஹெச்.வினோத்தின் ஸ்மார்ட் முடிவுகள். 'சதுரங்க வேட்டை'யின் எவர்க்ரீன் ட்ரெண்டிங் வசனங்களை எழுதிய வினோத், 'நேர்கொண்ட பார்வை'யிலும் அந்தப் பெருமையை தக்கவைக்கிறார். கூர்மையான வசனங்கள், அஜித்தின் குரலில் மின்னுகின்றன, தேவையான இடங்களில் கிழிக்கின்றன. நீதிமன்றக் காட்சிகள் நிறைந்த படமென்றாலும் நம் வழக்கப்படி எதிர் எதிர் கவுண்டர் நிரம்பிய, எதுகைமோனை நிரம்பிய ஆவேசமான வசனங்களாகத் திணிக்காமல், செய்தியை அழுத்தமாகச் சொல்லும் வார்த்தைகளை மட்டும் வசனமாக்கியிருப்பது ஆறுதல், சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் பெண்களின் பழக்கவழக்கங்களை குற்றம் சொல்லும் ரங்கராஜ் பாண்டேவின் வசனங்களுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசனங்களுக்கும் விசிலடித்து வரவேற்ற பொதுப்புத்தியாளர்களும் இரண்டாம் பாதியில் உறைந்திருப்பது அல்லது உணர்ந்து அஜித்தின் வசனங்களுக்குக் கைதட்டுவது படம், அந்த நேரத்திற்குள் நமக்கு ஏற்படுத்திய நிலைமாற்றத்தை உணர்த்துகிறது.

 

ajith vidhya



அஜித்தினுடைய திரைவாழ்வின் முக்கிய படங்களுள் ஒன்று 'நேர்கொண்ட பார்வை'. பைபோலார் டிஸார்டர் கொண்ட வழக்கறிஞர் பரத் சுப்ரமணியமாக மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் ஓரிரு பார்வைகள், இடைவேளைக்கு முன் ஒரு ரௌத்திரம், நீதிமன்ற காட்சிகளில் குழப்பம், தீர்க்கம் என நடிப்பில் அவருக்கு நல்ல வேட்டை. அதை அதிரடியாக அல்லாமல் அமைதியாக, அழுத்தமாகச் செய்திருக்கிறார். அடுத்த ஈர்ப்பு, ஷ்ரத்தா. மன்னிப்புக் கேட்க முடியாது என சுயமரியாதையில் திமிறுவதும் உண்மையை நீதிமன்றத்தில் சொல்லி வெடித்து அழுவதுமென மீராவாக நம்முன் நிற்கிறார் ஷ்ரத்தா. ஃபாமியாக 'பிக்பாஸ்' புகழ் அபிராமி, ஆன்ட்ரியா தாரங்காக ஆண்ட்ரியா தாரங் இருவரும் பாத்திரத்தில் மிகச் சிறப்பாகப் பொருந்தியிருந்தனர். இளைஞர்கள் அர்ஜுன், அஸ்வின், ஆதிக் மூவரும் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட பணக்கார இளைஞர்களை மிகநன்றாகப் பிரதிபலித்துள்ளனர். வித்யா பாலன் அழகோ அழகு. ஆனால், மையக்கதையிலிருந்து சற்றே விலகிய பகுதியில் இருக்கிறார். படத்தின் இன்னொரு முக்கிய அறிமுகம் ரங்கராஜ் பாண்டே. இந்தப் பாத்திரம் அவருக்காகவே செய்யப்பட்டது போலவே இருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே நடிப்பு அதீதமாகியுள்ளது. என்றாலும் ஒரு நல்ல அறிமுகமாகக் கிடைத்துள்ளார் நடிகர் பாண்டே. நீதிபதியாக வரும் டி.ராமச்சந்திரன் கவனம் ஈர்க்கிறார்.

யுவனின் பின்னணி இசை சிறப்பு, 'வானில்' பாடலின் இசை மனதை அழுத்துகிறது. ஆனால், மற்ற இரண்டு பாடல்களிலும் பெரிய தாக்கமில்லை. பின்னணி இசையை மிகச் சிறப்பாகக் கொடுத்துள்ளார் யுவன். அஜித்திற்கான தீம் ம்யூசிக்கில் மட்டும் 'விவேகம்' படத்தின் 'தலை விடுதலை' நினைவு வருகிறது. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒட்டுமொத்த படத்தின் தரத்தை அதிகரித்துள்ளது. இருண்மை சூழ்ந்த முதல் பாதி, மெல்ல வெளிச்சம் பரவும் இரண்டாம் பாதியென ஒளிப்பதிவு மிகச் சிறப்பு. அந்த இன்டெர்வல் சண்டைக்காட்சி தரும் சிலிர்ப்பிற்கு ஒளிப்பதிவும் பொறுப்பு.

பெண்களுக்கான அறிவுரை சொல்லும் படங்களைக் கடந்து பெண்கள் குறித்த அறிவை சமகால இளைஞர்களுக்கு சொல்லும் புதிய பார்வை, இந்த 'நேர்கொண்ட பார்வை'. இது பெண்களுக்கான படமல்ல, ஆண்களுக்கான, பெண்கள் குறித்த படம். பெண்களும் பார்க்கலாம். குறைகளைத் தாண்டி நோங்கிய தாக்கத்தை கிட்டத்தட்ட தந்துவிட்டது இந்த 'நேர்கொண்ட பார்வை'. இனி பெண்கள் குறித்த நம் பார்வையை பரிசீலனை செய்யவேண்டும்.                                                                                              

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.