Advertisment

மதத்தைச் சுற்றி நடக்கும் குற்றங்கள்... என்ன செய்கிறார் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா?! 

ஊரே சிரிக்கும் அளவுக்கு ‘நானும் டிடெக்டிவ்தான்’ ‘நானும் டிடெக்டிவ்தான்’ என்று சுற்றி வரும் ஒருவன் ஊரே வியக்கும்படி ஒரு மிகப்பெரிய வழக்கை துப்பறிந்து கண்டுபிடிப்பதுதான் ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மிகச்சிறிய பட்ஜெட்டில் சிறிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு, படத்தை பார்த்தவர்கள் கொண்டாடி ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாக ப்ரொமோஷன் செய்ய, ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா.

Advertisment

agent sai

டிடெக்டிவ் சினிமாக்களை பார்த்து கரைத்துக் குடித்து, தன் ஆஸ்தான குரு ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஒரு பெரிய டிடெக்டிவ் ஆகவேண்டும் என்கிற கனவுடன் எஃப்.பி.ஐ எனும் ஃபாத்திமா இன்வஸ்டிகேடிவ் பீரோவை நடத்தி வருகிறான் ஆத்ரேயா. ஆனால் மாட்டுவது சில்லரை வழக்குகள் மட்டும். என்றாவது ஒரு பெரிய கேஸ் மாட்டும், நானும் ஊர் புகழும் டிடெக்டிவ் ஆவேன் என்ற வெறியுடன் வாழும் ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை துப்பறியப் போக, அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஸ்வரூபமெடுத்து அவன் முன் நிற்கிறது. இத்தனை வருடங்களாக தேடிக்கொண்டிருந்த அந்த பெரிய வழக்கு இதுதான் என்று ஆத்ரேயா ஆர்வமாகும்போது, அந்த வழக்கில் ஆத்ரேயாவையே குற்றவாளி என ஜெயிலில் தள்ளுகிறது போலீஸ்.

Advertisment

என்ன நடந்தது என்று நிதானித்து யோசிக்கும்போதுதான், தன்னைச் சுற்றி ஒரு பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பதையும் அதையறியாமல் தான் அதில் சிக்கிவிட்டதையும் உணர்கிறான். ஜாமீனில் வெளியே வந்து நீண்டுகொண்டே போகும் அந்த புதிருக்கான விடையை கண்டுபிடித்தானா என்பதை விறுவிறு திரைக்கதையும் சொல்கிறது ASSA. படத்தின் மிகப்பெரிய பலம் சுவாரசியமான திரைக்கதையும் புத்துணர்ச்சியான எழுத்தும்தான். ஆத்ரேயா யார் என காட்டுவதில் தொடங்கி, அவனிடம் வேலைக்கு வரும் நாயகி, அவர்கள் சந்திக்கும் சின்னச் சின்ன வழக்குகள் என படத்தின் ஆரம்ப காட்சிகளின் நகைச்சுவையும் சுவாரசியமும் சட்டென்று நம்மை படத்தோடு ஒன்றவைக்கின்றன. முதல் காட்சியில் துவங்கும் நகைச்சுவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பார்வையாளர்களை கூலாக்கி செல்கிறது.

agent sai 2

ஆத்ரேயா யதேச்சையாக ஒரு வழக்கை தொடப்போக, அது கொஞ்சம் கொஞ்சமாக பாண்டோரா பாக்ஸ் போல விரிந்துகொண்டே போவதும், அதை மூடப்போகும் ஆத்ரேயாவே ஒருகட்டத்தில் அதில் அடைபட்டுக்கொள்வதும் சுவாரசியமான முடிச்சுகள். ஆனால் படம் ஜெட் வேகமெடுப்பது இரண்டாம் பாதியில்தான். இந்த அத்தனை முடிச்சுகளுக்கும் காரணம் என்ன என்று ஆத்ரேயா தேடத்துவங்கும் இடத்தில் பறக்க ஆரம்பிக்கும் படம் கடைசிவரை அந்த வேகம் குறையாமல் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. ஆத்ரேயா தோண்டத் தோண்ட வெளியே வரும் உண்மைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அந்த அதிர்ச்சி இன்னும் கூடுகிறது. புதிருக்கான ஒரு விடை கிடைத்தாலும் அதில் ஏதோ ஒரு புள்ளிக்கான பதில் தெளிவாகாமல் உறுத்திக் கொண்டே இருப்பதும், அதற்கான பதிலின் மூலமே அந்த முடிச்சு அடுத்த கட்டத்திற்கு போவதும் அட்டகாசமான திரைக்கதையின் வெளிப்பாடு.

பதைபதைப்பை ஏற்படுத்தும் அந்த சம்பவங்களோடு நாயகனின் வாழ்வை சாமர்த்தியமாக கோர்த்திருப்பதும், படத்தின் மையமான உணர்வலைகளை அதனையொட்டியே கட்டமைத்திருப்பதும் பார்வையார்களை படத்தோடு வெகுவாக நெருங்கச் செய்வதோடு உணர்வுப்பூர்வமான ஒரு பந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. முதல் படத்திலேயே நிறைய அடுக்குகள் உள்ள ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை சுவாரசியமாகவும் ஜனரஞ்சகமாகவும் கொடுப்பது பெரும் சவால். அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்வரூப். பல வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் கிடைத்த ஹீரோ வாய்ப்பில் தனது இயல்பான நடிப்பான நகைச்சுவையாலும் முடிந்தவரை முத்திரை பதித்திருக்கிறார் நவீன் பாலிஷெட்டி. அசிஸ்டென்ட் டிடெக்டிவாக வரும் ஸ்ருதி, ஆத்ரேயாவிற்கு உதவும் போலீஸ், கர்னாடக டிடெக்டிவ், நாடக நடிகர், பர்கர் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் இன்ஸ்பெக்டர் என சுவாரசியமான பாத்திரப் படைப்பும் நடிப்பும் படத்தை மேலும் அழகாக்குகின்றன. குறிப்பாக கர்னாடக டிடெக்டிவ் பாத்திரம் சீரியஸாக செல்லும் இரண்டாம் பாதியை கலகலப்பாக்குகிறது. சின்ன பட்ஜெட் என்பது ஒளிப்பதிவில் ஆங்காங்கே தெரிகிறது. நேர்த்தியான படத்தொகுப்பும் படத்தின் தன்மைக்கேற்ப பயணிக்கும் இசையும் விறுவிறுப்பை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

agent sai3

நாயகன் கண்டுபிடிக்கும் பெரும்பாலான விஷயங்கள் எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே கண்டுபிடிப்பதுபோல் அமைத்திருப்பது சற்றே செயற்கைத்தனமாய் உள்ளது. அதேபோல, கிட்டத்தட்ட ஒரு பெரிய சிண்டிகேட் போல செயல்படும் இந்த சதிக்கூட்டத்தின் மூளையாக செயல்படுவது யார் என்று தெரிய வரும்போது, ஒரு சிறிய ஏமாற்றமும் வருகிறது. அதற்கு முந்தைய காட்சிகளில் அந்தக் கூட்டத்தை பற்றிய ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்த விதமும், அவர்கள் செய்யும் அதிர்ச்சிகரமான, சாமர்த்தியான செயல்களும் அவர்கள் குறித்த எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ஏற்றிவைத்திருக்க, அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக இல்லை அந்த பாத்திரங்களின் கனம். அந்த உண்மைகள் தெரியவரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமுமே கூட கொஞ்சம் அவசரத்துடன் எடுக்கப்பட்ட உணர்வையே ஏற்படுத்தியது.

இதையெல்லாம் தாண்டி சுவாரசியமான எழுத்து, புத்திசாலித்தனமான திருப்பங்கள், முடிச்சுகள், அதன் மூலம் வெளியே வரும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள், நாயகன் நாயகிக்கு இடையேயான க்ளிஷேக்கள் இல்லாத திரைக்கதை, ஸ்டைலிஷான மேக்கிங் என ஒரு விறுவிறுப்பான சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் பார்த்து நிறைவைத் தருகிறது ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. மதம் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அதைச் சுற்றி நடக்கும் குற்றசெயல்களை மையப்படுத்தி ஒரு கதையை எழுதியதையும், அதனை அடிக்கடி நாம் நாளிதழ்களில் கடந்து செல்லும் ஒரு செய்தியோடு தொடர்புபடுத்தி மிக சுவாரசியமான ஒரு திரைப்படமாக உருவாக்கியதையும் உச்சிமுகர்ந்து பாராட்டலாம்.

moviereview telugu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe