Advertisment

சமுத்திரக்கனிக்கு ஒரு வேண்டுகோள்! அடுத்த சாட்டை - விமர்சனம் 

க்ரைம் த்ரில்லர், பிளாக் காமெடி, ரொமான்டிக் காமெடி என திரைப்படங்களில் பல 'ஜான்ர'க்கள் (genre)உள்ளன. அப்படி வகைப்படுத்தி சொல்லக் கூடிய அளவுக்கு 'சமுத்திரக்கனி' ஜான்ர ஒன்று தமிழில் உருவாகியுள்ளது. ஆம், உலகின் அத்தனை நல்ல விஷயங்களையும் பேசி, கெட்ட விஷயங்களை சாடி, பின்னணி இல்லாதவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காட்சிக்குக் காட்சி அட்வைஸ் செய்து படம் எடுப்பதுதான் சமுத்திரக்கனி 'ஜான்ர'. சமுத்திரக்கனி இயக்கிய படங்கள், நடித்த படங்கள் என தொடர்ந்த இந்தவகைமை, இன்று யார் அப்படிப்பட்ட படங்கள் எடுத்தாலும் 'என்ன சமுத்திரக்கனி படம் மாதிரி இருக்கு' என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி. சில நேரங்களில் இந்த நல்ல விஷயங்களும் அட்வைஸ்களும் சற்று அதீதமாகிப் படத்தை பாதித்தாலும் அந்தப் பாதையில் அவ்வப்போது பயணிப்பதை நிறுத்தமாட்டேன் என்று 'அடுத்த சாட்டை'யோடு வந்து சொல்கிறார் கனி.

Advertisment

samuthira kani

ஒரு அரசு பள்ளி, அதன் குறைகள், நிறைகள், ஆசிரியர்களுக்குள்ளான அரசியல், மாணவர்களுக்கிடையே நிலவும் ஒழுங்கின்மை, ஒற்றுமையின்மை, அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை, அங்கு புதிதாக வரும் இளம், துடிப்பு மிக்கஆசிரியர், அவர் ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள், அதற்குக் கிளம்பும் எதிர்ப்புகள், நிகழும் விபரீதங்கள், மாணவர்களின் ஒற்றுமையாலும் உழைப்பாலும் பெறும் பெரிய வெற்றி, மனம் திருந்தும் மாற்றுக்கருத்துடையோர்... என தனது 'சாட்டை'யில் கதை சொல்லி இயல்பான மனிதர்களாலும் சம்பவங்களாலும் நகைச்சுவையாலும்பேசப்பட வேண்டிய பிரச்னையை பேசியதாலும் கவனம் பெற்ற இயக்குனர் அன்பழகனின் 'அடுத்த சாட்டை' இது. மேலே சொன்ன கதையில், 'அரசு பள்ளி'க்குப் பதிலாக 'கலை அறிவியல் கல்லூரி' என்று மாற்றி கொஞ்சம் சாதிப் பிரச்னையை சேர்த்துக்கொண்டால் அதுதான் 'அடுத்த சாட்டை'.

வெற்றி பெற்ற படத்தின் டெம்ப்ளேட்டில் மீண்டும் ஒரு முக்கிய பிரச்னையை பேசும், நல்ல விஷயங்களை பகிரும் இயக்குனரின்சமூக அக்கறையை கண்டிப்பாகப் பாராட்டவேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஒரே வீட்டில்கூட்டுக்குடும்பமாக வாழும் 100க்கும் மேற்பட்டோர், மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர், அந்த ஆசிரியருக்காக எதுவும் செய்யத் துணியும் மாணவர்கள் என பேச வேண்டியநல்ல விஷயங்களை ஒரு புறமும் பொள்ளாச்சி சம்பவம், கையில் சாதிக் கயிறு கட்டும் பழக்கம், இலங்கை தமிழரை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது என விமர்சிக்கப்பட வேண்டிய விஷயங்களை ஒரு பக்கமும்என இயக்குனர் லிஸ்ட் போட்டு ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பார் போல... காட்சிக்குக் காட்சி திகட்டத் திகட்ட பாசிட்டிவிட்டியும் அறிவுரையும் கிடைக்கிறது. அதுவும் படத்தின்முதல் பாதியில் நாம் குறுக்கே சென்றால், நம்மையும் நிறுத்தி அட்வைஸ் செய்து விடுவாரோ என்னும் அளவுக்கு ஃபுல் பார்மில் இருக்கிறார் தயாளன் (சமுத்திரக்கனி). நல்ல விஷயங்களின் தொகுப்பை உருவாக்கிவிட்டால் ஒரு நல்ல படம் உருவாகிவிடுமா என்றால் இல்லை என்பதுதான் பதில். அந்த நல்ல விஷயங்களில் பெரும்பாலானவை நம்முடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியவை என்பதும் நாள்தோறும் நாம் கண்டு வந்தவை என்பதும்தான் படத்தின் பலம்.

Advertisment

thambi ramaiah

தொடர் அறிவுரைகளுடன் செல்லும் படத்தில் நம்மை இணைத்துவைப்பது மாணவர்கள் தொடர்புடைய காட்சிகளில் உள்ள உணர்வுகளும் சிங்கப்பெருமாள் (தம்பி ராமையா) பாத்திரத்தின் வில்லத்தனமான காமெடியும்தான். ஒரு இடைவெளிக்குப் பிறகுதம்பி ராமையாவுக்குக்கிடைத்துள்ள சரியான வாய்ப்பு, மிக சிறப்பாக நடித்து நம்மை சிரிக்கவும் எரிச்சலடையவும் நெகிழவும்வைத்துள்ளார். சமுத்திரக்கனி, எப்போதும் போல் நல்லவராக நம் மனதில் பதிகிறார், புதிதாக எதுவுமில்லை.இவ்வளவு அறிவுரைகளை ஒருவர் சொல்லச் சொல்ல அவரை வெறுக்காமல் இருப்பதே பெரிய விஷயம். சமுத்திரக்கனிக்கு அது வாய்த்திருக்கிறது. பேருக்கு இருக்கும் நாயகியிடம் காதல் செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார் சமுத்திரக்கனி. மிக அளவாகத்தான் இருந்தாலும், அவருக்கு ஒரு வேண்டுகோள்... கட்டாயத்துக்காகக் காதல் காட்சிகள் வேண்டாமே... தொண்டன் படத்திலும் இந்த சங்கடம் அவருக்கு இருந்தது.அதுல்யா ரவி, யுவன் உள்ளிட்ட மாணவர்களாக வரும் அனைவரும் அவரவர் பாத்திரத்தில் ஓகே. ஆசிரியர்களில் ஓரிருவர் மனதில் நிற்கின்றனர்.

கிட்டத்தட்ட முழு படமும் அந்தக் கல்லூரி, அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே நகர்கிறது. கல்லூரி வாசலில் இருக்கும் டீக்கடைக்குக் கூட அது வராதது சற்று அயர்ச்சி. இறுதியில் ஒரு மாணவனுக்கு ஏற்படப்போகும் சோகம், அதற்கு முந்தைய ஒரு காட்சியில் அவன் மகிழ்ச்சியாய் பேசும் போதே தெரிந்துவிடுகிறது. இப்படி, படம் நெடுக நாம் எளிதில் அனுமானிக்கக் கூடிய காட்சிகள் அதிகம். கல்லூரியில் நிலவும் சாதிப் பிரிவினையும் சாதி உணர்வும் இயல்பாகக் காட்டப்படாததால் அதன் தீவிரம் நம்மை வந்தடையவில்லை. உதாரணம்... கல்லூரி முதல்வர் வெளிப்படையாக ஒரு மாணவனை சாதி ரீதியாகத் திட்டுகிறார். இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளால் அடியில் இருக்கும் உண்மை நம்மை உறுத்தவில்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் சாதி இருக்கும், ஆனால் எப்படி பின்பற்றப்படும், எந்த வார்த்தைகளால் குறிப்பிடப்படும் என்பதையெல்லாம் இயக்குனர் சற்று உண்மைக்கு நெருக்கமாக எழுதியிருந்தால் பிரச்னையின் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதே போல் க்ளைமாக்ஸில் திடீரென வரும் ஒரு பகுதி, கூடுதலாக ஒட்டப்பட்ட உணர்வை அளிக்கிறது.

adutha satai team

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'வேகாத வெயிலில' பாடல் மட்டும் நம்மை கவனிக்க வைக்கிறது, மற்றவை அனைத்தும் கடந்து சென்றுவிடுகின்றன. ராசமாதியின் ஒளிப்பதிவு கூட, குறைய இல்லாமல் படத்திற்குத் தேவையானதை செய்திருக்கிறது. படத்தை க்ரிஸ்ப்பாகத் தொகுத்து நன்மை செய்திருக்கிறார் நிர்மல்.

'அடுத்த சாட்டை' கொடுத்த அடி 'சாட்டை' கொடுத்ததைப் போல வீச்சுடன் இல்லாவிட்டாலும் மோசமில்லை. கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் நெகிழ்ந்து, நிறைய அறிவுரைகள் கேட்கத் தயாராக இருப்பவர்கள் கண்டிப்பாக ரசிக்கலாம்.

aduthasaatai samuthirakani moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe