ADVERTISEMENT

ஆதார் தேவையா? தேவையற்றதா? - விமர்சனம்

05:28 PM Sep 26, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாஸ் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் படம் ஆதார். அதிலும் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல், கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து எதார்த்தமான உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம் ஆதார். நீண்ட நாட்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாஸ்க்கு வெற்றியை கொடுத்ததா இப்படம்?

படிப்பறிவு இல்லாத கருணாஸ் மற்றும் அவரது மனைவி ரித்விகா ஆகியோர் கட்டடம் கட்டும் தொழிலாளிகளாக தின கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகா குழந்தையை பெற்ற பின் காணாமல் போய்விட்டதாக கணவர் கருணாஸ் கையில் கைகுழந்தையோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இந்த கேசை விசாரிக்கும் போலீசார் கருணாஸின் மனைவி கள்ளக்காதலனோடு ஓடிவிட்டதாக கூறி கேசை க்ளோஸ் செய்து விடுகின்றனர். இதை நம்ப மறுக்கும் கருணாஸ் புகாரை மேல் முறையீடு செய்கிறார். இதையடுத்து உண்மையில் ரித்விகாவுக்கு என்ன நடந்தது? அதை கருணாஸ் கண்டுபிடித்தாரா, இல்லையா? காணாமல் போன ரித்விகா கிடைத்தாரா, இல்லையா? என்பதே பல திருப்பங்கள் நிறைந்த இப்படத்தின் அதிர்ச்சிகரமான மீதி கதை.

ஒரு எளிமையான கதையை எதார்த்தம் மாறாமல் அப்படியே நம் வாழ்க்கையில் நடப்பதை போன்று கண் முன் கொண்டு வந்து ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ராம்நாத். ஒரு சாமானியன் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதை மிகவும் வெளிப்படையாகவும், எதார்த்தமாகவும் அதிர்ச்சி ஏற்படும்படியும் காட்டி இருக்கிறது இந்த ஆதார் திரைப்படம். குறிப்பாக எளிய மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை அப்படியே தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். கதையையும் கதாபாத்திரங்களையும் மிக அழுத்தமாக படைத்திருக்கும் இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட சிரத்தை எடுத்து, அதனை சுவாரசியமாக கொடுத்திருக்கலாம். மற்றபடி தேவையில்லாத பாடல் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ, கமர்சியல் காட்சிகளோ எதுவும் வைக்காமல் தைரியமாக எதார்த்த சினிமாவுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக அமைத்து பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றிபோக வைக்கிறார்.

ஒரு ஏழை கட்டிட தொழிலாளியை அப்படியே கண்முன் பிரதிபலித்துள்ளார் நடிகர் கருணாஸ். கொஞ்சம் நரைத்து, கொஞ்சம் கருத்த முடியுடன், பெரிய தாடியுடன், அழுக்குலுங்கி, சட்டை போட்டுக்கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல் நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கட்டிடக் கூலி தொழிலாளியை அப்படியே தன் நடை, உடை, பாவனை மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார் நடிகர் கருணாஸ். இவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறுகிறார் நாயகி ரித்விகா. அதேபோல் சில காட்சிகளே வந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை இனியா மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் உமாரியாஸ், பாகுபலி பிரபாகர், அருண்பாண்டியன் ஆகியோர் நாம் தினசரி பார்க்கும் போலீஸ்காரர்களை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக இதில் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருண்பாண்டியன் அளவான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீதர் மாஸ்டர், பி எல் தேனப்பன் மற்றும் நடிகர் ஆனந்த் பாபு ஆகியோர் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தி சில இடங்களில் கண்களை கலங்க செய்துள்ளது. அதேபோல் இரவு நேர காட்சிகள் சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூகத்துக்கு தேவையான ஒரு முக்கிய கதையை மிக அழுத்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ள ஆதார் திரைப்படம், திரைக்கதையில் மட்டும் ஏனோ சற்று மெதுவாக நகர்ந்து ஆங்காங்கே அயர்ச்சி கொடுத்துள்ளது.

ஆதார் - சமூகத்துக்கு அவசியம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT