Skip to main content

கருப்பு நாய் வெள்ளை நாய் கதை தெரியுமா? - 60 வயது மாநிறம் விமர்சனம் 

வாழ்க்கையின் சோகங்களை மேக்-அப் போடாமல் முழு வீச்சுடன்  காட்டுகின்ற படங்கள் ஒரு வகையில் சிறந்த படங்கள் என்றால் வாழ்க்கையின் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை, பாடங்களை மென்மையாகச் சொல்லும் படங்களும் சிறந்த படங்களே. அந்த வகை முயற்சியாக வெளிவந்திருக்கிறது இயக்குனர் ராதாமோகனின் '60 வயது மாநிறம்'.

 

prakash raj'அல்ஸைமர்' (ஞாபக மறதி) நோயால் பாதிக்கப்பட்ட அறுபது வயது அப்பா பிரகாஷ்ராஜை ஒரு முதியோர் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு தன் வேலையில் முழு கவனத்துடன், அமெரிக்கா செல்லும் முயற்சியில் இருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பாவின் மேல் பல புகார்கள் கொண்ட அவர் எப்போதாவது சென்று அவரை சந்திக்கிறார், தேவையானதை வாங்கித் தருகிறார். அவ்வளவுதான் அப்பா மகன் உறவு. ஒரு முறை இப்படி சந்தித்து வெளியே அழைத்துச் செல்லும்போது விக்ரம்பிரபுவின் அலட்சியத்தால் பிரகாஷ்ராஜ் தொலைந்துவிடுகிறார். இன்னொரு புறம் சமுத்திரக்கனி டீம் ஒரு கொலையை செய்துவிட்டு அதை மறைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். என்ன நடந்தது என்பதே  '60 வயது மாநிறம்'.

 

 


இயக்குனர் ராதாமோகன் 'அழகிய தீயே', 'மொழி', 'அபியும் நானும்' என அழகாக ஈர்த்தவர். அவருக்கேற்ற கதையை கன்னடத்திலிருந்து பெற்றுத் தந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணுவும் பிரகாஷ்ராஜும். இந்தப் படத்தையும் பெரிய அதிர்வுகள் இல்லாமல் மென்மையாக நடத்திச் செல்கிறார். பிரகாஷ்ராஜூக்கு எந்த கதாபாத்திரமும் கடினமல்ல. அவரைத்தாண்டி அந்தப் பாத்திரங்களைப் பார்ப்பது ரசிகர்களுக்குத்தான் சில நேரங்களில் கடினம். ஆனால், இந்தப் படத்தில் மிக எளிதாக ஒரு முதியவராக நம் மனதில் பதிகிறார். ஒரு காட்சியில், அமர்ந்திருக்கும் புத்தர் சிலை முன்பு, அவரும் ஒரு புத்தர் போலவே அமர்ந்துகொண்டு தன் பழைய நினைவுகளை பகிரும் இடம் ஒரு சாம்பிள்.

 

 

vikram prabhuவிக்ரம் பிரபுவுக்கு ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல கதை அமைந்துள்ளது. அமைதியான நடிப்பு. அப்பா மீது அவர் காட்டும் வெறுப்பை நம்மிடம் அவர் சம்பாதிப்பதே அவரது நடிப்பிற்கு வெற்றி. சமுத்திரக்கனி, ஒரு ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிக்கு அடியாளாக நன்றாக நடித்தாலும், நமக்கு அவரை நல்லவராகவே பார்க்கத் தோன்றுகிறது, எந்தத் தீமையும் செய்துவிட மாட்டார் என்றே எண்ண வைக்கிறது. அது படத்துக்கு ஒரு குறையே. 'மேயாத மானி'ல் தங்கையாகக் கவர்ந்த இந்துஜா, இந்தப் படத்தில் நாயகியாக ஈர்க்கிறார். அளவான, அழகான நடிப்பு. இவர்களைத் தாண்டி படத்தில் நம்மைக் கவர்வது இளங்கோ குமரவேல். அவர் பேசும் ஒவ்வொரு வரியும் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. தமிழ் சினிமாவில் ராதாமோகனைத் தாண்டி இவர் அதிகம் பயன்படுத்தப்படாதது வருத்தமே (குரங்கு பொம்மை நீங்கலாக). 

 

 


அவசர வாழ்வில் பெற்றோரை கவனிக்க மறப்பதால் நாம் இழப்பது வெறும் உறவுகளை அல்ல அவர்களிடம் இருக்கும் பெரும் அன்பையும் அனுபவங்களையும் வாழ்வியல் நெறிகளையும் என்பதை பல காட்சிகளில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். 'உங்கள் திலகம்', 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்', கருப்பு நாய் வெள்ளை நாய் கதை, கணவனையே மறந்துவிட்ட பெண்ணுக்கு பெரும் துணையாக இருக்கும் கணவர் என அழகழகான குட்டிக் குட்டி எபிசோட்கள் ராதாமோகன் ஸ்பெஷல். படத்தைப் பெரிதாகத் தாங்கி நிற்பவை விஜியின் வசனங்கள். பிரகாஷ்ராஜ் பேசும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவருக்கு பாடமாக அமைவதாக வரும் வசனங்களாகட்டும், "பொதுவாவே ஹஸ்பண்டோட நண்பர்கள் மேல வொய்ஃப்புகளுக்கு நல்ல அபிப்ராயம் இருக்குறதில்ல சார், ஆனா ஹஸ்பண்டுகள் அப்படியில்ல", "இனிமேல் 500, 1000 நோட்டுகளெல்லாம் செல்லாதுன்னு பிரதமர் 8 மணிக்கு அறிவிச்சப்போ நான் 8.30 மணி வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன், என்கிட்டே இருநூறு ரூபாதான் இருந்துச்சு" போன்ற காமெடி வசனங்களாகட்டும் அமைதியான படத்தில் அதிகமாக ரசிக்கவைக்கின்றன.
 

 

samuthrakaniபடத்தில் சமுத்திரக்கனியை சுற்றியுள்ள கதைதான் பலவீனமாக இருக்கிறது. பல கொலைகளை செய்யக்கூடிய ஒரு கேங் வெறும் நான்கைந்து பேருக்குள்ளேயே சுற்றி வருவது நம்பகத்தன்மையை குறைக்கிறது. படத்தின் சில காட்சிகளில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது. இளையராஜாவின் பின்னணி இசை ஆங்காங்கே மட்டும் அழுத்தம் தருகிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பல அழகான ஃப்ரேம்கள் இருக்கின்றன. ஜெய்யின் படத்தொகுப்பு சில இடங்களில் பழைய ஸ்டைலில் இருக்கிறது.

 

 


சரி, அந்தக் கருப்பு நாய் வெள்ளை நாய் கதை என்ன? நம் எல்லோருக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் இருக்கும். கருப்பு நாய் கெட்ட குணங்களும் வெள்ளை நாய் நல்ல குணங்களையும் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கும். எந்த நாய் ஜெயிக்கும் தெரியுமா? அதை படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லுவார். 'அதென்ன, கருப்புதான் கெட்டதா இருக்கணுமா?' என்று கேட்டால் அதையும் சமன்படுத்த படத்தில் ஒரு வசனம் உண்டு. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அறுபது வயது மாநிறம்... அனுபவங்களின், அன்பின் நிறம்.     

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்