Advertisment

இன்னும் எத்தனை நாள் தமிழ் சினிமா போலீஸ் இப்படியே இருக்கும்?  100 - விமர்சனம்  

100

Advertisment

தமிழகத்தில் ஏதேனும் பரபரப்பான சென்சேஷனல் விஷயங்கள் நடக்கும்போது எப்படி அது பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை சில நாட்கள் பிடித்துக் கொள்ளுமோ அதேபோல் சினிமா டிஸ்கஷன் அறைகளையும் பிடித்துக்கொள்ளும். தொடர்ந்து அந்த கருவைச் சார்ந்த படங்கள் வெளிவருவதை பார்க்கலாம். அந்த வரிசையில் தற்போதைய தமிழ் சினிமாக்களின் கருப்பொருளாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகள். எப்போதுமே பெண்களுக்கு எதிரான வன்முறை நிரம்பியிருக்கும் நம் சமூகத்தில், பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது அது எப்போதையும் விட அதிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே சினிமா உட்பட அத்தனை ஊடகங்களிலும் அது பிரதிபலிப்பது. அப்படி இளம்பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக பயன்படுத்தும் ஒரு கும்பலை, தனியாளாய் ஒரு போலீஸ்காரன் பிடிக்கும் படம்தான் '100’.

எஸ்.ஐ தேர்வெழுதிவிட்டு போஸ்டிங்கிற்காகக் காத்திருக்கும் இளைஞனாக அதர்வா. முறுக்கேறிய உடம்பும் நேர்கொண்ட பார்வையும் பக்கா. ஆனால் உடலில் இருக்கும் கச்சிதம் உடல்மொழியிலும் நடிப்பிலும் கொஞ்சம் குறைவுதான். இதற்கு முன்பு அதர்வா செய்த பல பாத்திரங்களின் சாயலிலேயேதான் சத்யா எனும் இந்த போலீஸ் கதாப்பாத்திரத்தையும் செய்துள்ளார். இதில் வேறுபாடு காட்டத் துவங்குகையில்தான் அதர்வாவின் அத்தியாயம் தமிழ் சினிமாவில் துவங்கும்.

பொதுவாக ஒரு படத்தின் முதல் இருபது நிமிடங்கள்தான் பார்வையாளர்களை படத்திற்கு உள்ளே கொண்டுவர வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அப்படியே நேர்மாறாக, முதல் இருபது நிமிடங்கள்தான் பார்வையாளர்களை படத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. அதர்வாவின் இன்ட்ரோ, அதர்வா ஹன்சிகா காதல் உள்ளிட்ட காட்சிகள் எழுதப்பட்ட விதத்திலும் எடுக்கப்பட்ட விதத்திலும் எந்தவித மெனக்கிடலும் இல்லை. கதாப்பாத்திரங்களின் அறிமுகங்களைத் தவிர்த்து அந்தக் காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை. அந்த சில காட்சிகளிலும் அதர்வாவின் நடிப்பிலும் அத்தனை செயற்கைத்தனம். அதிலும் படம் முடிந்தவுடன் ‘இதுக்கு எதுக்கு ஹன்சிகா’ என ரசிகர்களே பேசி செல்கின்றனர்.ஆனால் அதர்வா போலீஸ் ஆகும் காட்சியில் இருந்து படம் சூடுபிடிக்கத் துவங்குகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வேலைக்குச் செல்லும் அதர்வாவிற்குக் கொடுக்கப்படும் வேலையும், அந்த சூழலில் நடைபெறும் நகைச்சுவைகளும் சுவாரசியத்தை கூட்டுகின்றன. அந்த வேலையை வைத்தே அதன்பிறகான திரைக்கதையை கட்டமைத்திருப்பதும் நல்ல திரைக்கதை உத்திதான். ஒரு ஃபோன்கால் மூலம் தெரியவரும் ஆபத்தை நாயகன் எதிர்கொண்டு அதை தீர்ப்பது எனும் கதையை சில ஆங்கிலப் படங்களிலும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களிலும் பார்த்திருந்தாலும், 100 சுவாரசியம் குறையாமலேயே எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

100

ஆனால் அதர்வா கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் காட்சியிலும் அதைத் தொடர்ந்து அவர் புலனாய்வு செய்யும் காட்சிகளிலும் எந்தவித புதுமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த காட்சி ஆரம்பித்தவுடன் பார்வையாளர்களே அதற்கான விடையை கண்டுபிடித்துவிட, அதர்வா அதை புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பதாக பெரும் பில்டப்புடன் காட்டுவது எந்தவித இம்பாக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. இயக்குனர் சாம் ஆன்டன் படத்தில் திருப்பங்களுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை, அதற்கு பின் இருக்கவேண்டிய லாஜிக்கிற்கு கொடுக்கவில்லை. ராதாரவி, ஹன்சிகாவின் தம்பியாக வரும் இளைஞன் இருவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர். யோகி பாபு சமீபத்திய தமிழ்ப்படங்களின் கட்டாய இணைப்பாகவே ஆகிவிட்டார். ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கவும் தவறவில்லை. சாம் சி.எஸ் இசையும், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் படத்தின் மூடை செட் செய்யவும், அந்த பரபரப்பை தக்கவைக்கவும் உதவுகின்றன. படத்தொகுப்பாளர் ரூபன் கண்ணை மூடிக்கொண்டு முதல் இருபது நிமிடங்களில் கத்திரி போட்டிருக்கலாம்.

பெண்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுவதும், குற்றவாளிகள் சரணடைவதும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத வகையில் வரும் அந்த இன்டர்வெல் ட்விஸ்ட்டும் படத்தின் மையக்கருவோடு அது இணைக்கப்பட்ட விதமும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்தக் கடத்தல் நெட்வொர்க்கின் மூளையாக செயல்படுபவர் யார் என்ற கேள்வியை நோக்கி நகரும் இரண்டாம் பாதியில், அந்த முடிச்சு அவிழும் விதமும் அதில் புகுத்தப்பட்டுள்ள ட்விஸ்ட்டும் அட்டகாசம். இவர்தான் குற்றவாளி என்று பார்வையாளர்கள் கண்டுபிடிக்கும்படி பல க்ளூக்களை கொடுத்து, அதற்கேற்ற வண்ணம் கதையை நகர்த்தி, பார்வையாளர்கள் இவன்தான் இவன்தான் என்று கைகாட்டும்போது அதில் ஒரு திருப்பம் வைப்பது மிக சுவாரசியமான திரைக்கதை உத்தி. அது இந்தப் படத்தில் மிகச்சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

100

இருந்தாலும் அந்த பெண்கள் எத்தனை காலம் எங்கே வைக்கப்பட்டு இருந்தார்கள், யார் வைத்திருந்தார்கள், எப்படி யார் கண்ணிற்கும் படாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும், திடீர் திடீரென தோன்றும் அதர்வாவின் குடும்பம், பெரும்பாலான நேரங்களில் காணாமல் போகும் ஹன்சிகா, க்ளைமேக்ஸில் தொடர்ந்து இடம்பெறும் பேப்பர் கட்டிங்குகள் என ஒரு நிலையான சினிமா அனுபவம் கிடைக்காமல் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதியில் குற்றவாளியை சுட்டுக் கொல்லும் காட்சிக்கு ராதாரவியின் கதாப்பாத்திரத்தின் மூலம் ஒரு எமோஷனல் டச் கொடுத்திருந்தாலும், இன்னும் எத்தனை தமிழ் படங்கள் என்கவுண்டருக்கு ஆதரவாக வருமோ என்ற கேள்வியும் பயமும் எழுகிறது. என்கவுண்டர் என்பதற்கு ஒரு நாயகத்தன்மை கொடுப்பதையும், இவனுக்குலாம் இது வேணும் போன்ற எண்ணங்களை வளர்ப்பதையும் தவிர்த்து, என்கவுண்டர்களின் பின்னால் உள்ள அரசியல், மனித உரிமை பிரச்சினைகள் போன்ற சமூக அரசியலையும் தமிழ் சினிமாக்கள், முக்கியமாக தமிழ் போலீஸ் சினிமாக்கள் எப்போது பேசும் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து எழுகிறது.

moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe