நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார்.
துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸ் மற்றும் ஸ்பெய்னில் நடந்த 24ஹெச் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். இப்போட்டியை தொடர்ந்து டிசம்பரில் நடக்கும் ஆசியன் லெ மான்ஸ் தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் மற்றும் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் அஜித்குமார் ரேசிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் கைகோர்த்துள்ளது. அதாவது அந்த அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தயாரிக்கும் கேம்பா குளிர்பானம் இணைந்துள்ளது. இது தொடர்பாக அந்த ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேசிங் அணியுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம். கேம்பா எனர்ஜி உலகளாவிய பந்தயத்தில் அணி சிறந்து விளங்க வலுப்படுத்தும் மற்றும் அச்சமில்லாத சாதனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us