ரவி மோகன் கடைசியாக பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்தது. இப்படத்தை அடுத்து ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ மற்றும் ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘ப்ரோ கோட்’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மேலும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற தலைப்பில் யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரத்ன குமார், பாக்கியம் சங்கர் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக தாவூதி ஜிவால் நடித்துள்ளார். இவரை தவிர்த்து சக்தி வாசுதேவன், கே எஸ் ரவிக்குமார், நாசர், டிடிவி கணேஷ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. நாயகன் ரவி மோகன் டப்பிங் பணிகளை தொடங்கினார். இதையடுத்து படத்தின் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில், “இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு நிகழ்வில் ரவி மோகன், அமைச்சர் சேகர் பாபு படத்தின் தலைப்பை கேள்விபட்டு நான் தான் அந்த பாபு என கூறியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us