ரவி மோகன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘ப்ரோ கோட்’(BRO CODE). கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் தலைப்பிற்கு டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது. ப்ரோ கோட் என்ற பெயரை தங்கள் நிறுவனம் பதிப்புரிமை செய்து வைத்திருப்பதால் அதை படத்தில் பயன்படுத்தக்கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தது. இதையடுத்து ப்ரோ கோட் என்ற பெயரை தனது படத்துக்கு பயன்படுத்த தடுக்கக்கூடாது என அந்த மதுபான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்தத் தடுக்கக்கூடாது என அந்த மதுபான நிறுவனத்துக்கு மூன்று மாதம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மதுபான நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரவி மோகன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தனிநீதிபதி உத்தரவிட்டு மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதி ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் இடைக்காலத் தடையை நீக்க கோரி ரவி மோகன் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அந்த மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Follow Us