இயக்குநர் ரத்னகுமார் ‘29’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், “என்னுடைய 29வது வயதில் லோகேஷ் எனும் நண்பன் கிடைத்தான். இந்தப் படத்திற்கு ஏன் 29 என பெயரிட்டேன் என்றால் அந்த வயது தான் முக்கியமானது.‌ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது.‌ அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் 'உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்' என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார். 

Advertisment

என்னைப் பொறுத்தவரை உடல் தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன்.‌ சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். 'மேயாத மான்' படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறேன். மேயாத மான் ரொமான்டிக் காமெடி படம் என்றால் .. இந்த' 29' படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமாண்டிக் படம் தான். 

என் நண்பன் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். அதனால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய நண்பரான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார். நடிகை ப்ரீத்தி அஸ்ரானியிடம் இப்படத்தின் கதையை சொன்னேன். முழுவதுமாக கேட்டுவிட்டு எனக்கு சில இடங்களில் நெருடல் இருக்கிறது. அதில் நடிப்பதற்கு மனம் ஒப்பவில்லை என்றார். அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக விளக்கம் அளித்தேன். ஆனாலும் அவருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் இந்த கதையை ஒரு பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்.. நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என நினைத்தேன்.  அவர்கள் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதன் பிறகு படத்தின் தோற்றமே மாறிவிட்டது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

இப்படத்தின் நாயகனான விது ஒரு வளர்ந்த குழந்தை. அவர் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்திருக்கிறார். ' ரெட்ரோ' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படத்திலும் அவருடைய முகம் தெளிவாக இருக்காது. இந்த படத்தில் தான் அவருடைய முழு உருவத்தையும் ஸ்டைலாக காட்சிப்படுத்தி இருக்கிறோம். நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் மற்றவர்கள் பார்க்க இயலாத கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் தனுஷ் நடித்த விஐபி படம் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதி இருக்கிறேன்” என்றார்.