சமீப காலமாக பாலிவுட்டில் பெண்களுக்கான வேலை நேர விவகாரம் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. முதலில் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அதன் பிறகு வேலை செய்யும் நேரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து அவர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக அப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மறைமுகமாக தீபிகா படுகோனை சாடியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான ‘கல்கி 2898 ஏடி’ பட இரண்டாம் பாகத்திலும் தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதற்கு அவர் முன்பு பேசிய கருத்து தான் காரணம் என பரவலாக சொல்லப்பட்டது. தீபிகா படுகோன் கருத்துக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா இந்த விவகாரம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “நான் அதிகமாக வேலை செய்வேன். ஆனால் அதை நான் பரிந்துரைக்க மாட்டேன். அது நிலையானது அல்ல, அதனால் அதை செய்யாதீர்கள். உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள், அது 8 மணி நேர வேலையாக இருந்தாலும் சரி 10 மணி நேரம் வேலையாக இருந்தாலும் சரி. அது உங்களை பின் நாட்களில் காப்பாற்றும்.
ஆனால் முடிவு எடுக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தால் நடிகர்களை அப்படி நடிக்க வைக்காதீர்கள் என்றுதான் சொல்வேன். அலுவலகங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இருப்பது போல நடிகர்களுக்கும் இருக்கட்டும். ஏனென்றால் நடிகர்களுக்கும் குடும்ப வாழ்க்கை இருக்கிறது. அதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். ராஷ்மிகா நடிப்பில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படம் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
Follow Us