ஏஐ தொழில்நுட்பம் தற்போது பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரைத்துறையில் மறைந்த பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களை மீண்டும் திரையில் கொண்டு வர பயன்படுகிறது. அதே சமயம் இதை தவறாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் திரை பிரபலங்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக வெளியிடுகின்றனர்.
முதலில் இந்த விவகாரம் 2023ஆம் ஆண்டு நவம்பரில் ராஷ்மிகாவின் டீப் ஏஐ ஃபேக் வீடியோவால் பூதாகரமாக வெடித்தது. இதற்கு ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அதன் பிறகு பல்வேறு நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏஐ-யால் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு உலா வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்து குரல்கள் வலுத்து கொண்டு தான் வருகிறது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஏஐ விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உண்மையை உருவாக்க முடிந்தால், பகுத்தறிவு நமது மிகப்பெரிய பாதுகாப்பாக மாறும். ஏஐ என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும், ஆனால் அதை சிலர் தவறாகப் பயன்படுத்தி பெண்களை குறிவைக்கின்றனர். இது தார்மீக வீழ்ச்சி.
இண்டர்நெட் எப்போதும் உண்மையின் கண்ணாடி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எதையும் புனையக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. அப்படி தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். ஏஐ-யை மிகவும் கண்ணியமாகவும் முற்போக்கான சமூகத்தை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும். பொறுப்புடன் இருக்க வேண்டும். மனிதர்கள் மனிதர்களைப் போல நடந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்கு கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us