சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘அனிமல்’. இதில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை 4 பேர் தயாரித்திருந்தனர். 8 பேர் இசையமைத்திருந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் ஒரு சாரார் மத்தியில் வன்முறையையும் ஆணாதிக்கத்தையும் சித்திரிப்பதாக கடும் விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்துதள்ளினர்.
இப்படி விமர்சனம், பாராட்டை இப்படம் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான லீட் முதல் பாகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான படப்பிடிப்பை தொடங்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில் அதன் படப்பிடிப்பு குறித்து மற்றும் இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை ரன்பீர் கபூர் பகிர்ந்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்தில் பகிர்ந்திருந்த அவர், “இயக்குநர் தற்போது மற்றொரு படத்தை இயக்கி வருகிறார். அதனால் அனிமல் 2 படத்தை 2027-ல் தொடங்கவிருக்கிறோம். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது.
இரண்டாம் பாகத்துக்கு அனிமல் பார்க் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோ வில்லன் என இரண்டு பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தை அடுத்து மூன்றாம் பாகத்தையும் இயக்குநர் இயக்க திட்டமிட்டிருக்கிறார்” என்றார்.
Follow Us