சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா தேவயானி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ப்ரண்ட்ஸ். இளையராஜா இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நட்பு, காதல், காமெடி என கலகலப்பாகவும் அதேசமயம் எமோஷ்னலாகவும் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் அமைந்திருந்தது. குறிப்பாக வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் இன்றளவும் அவரது கேரியரில் முக்கியமாக இருக்கிறது. 2019ல் இக்கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டானது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டு வரும் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இதன் புதிப்பிக்கப்பட்ட 4கே ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடக்க படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ரமேஷ் கிருஷ்ணா பேசுகையில் சூர்யா - ஜோதிகா காதல், அஜித் - ஷாலினி காதல் என சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஃப்ரெண்ட்ஸ் பட சமயத்தில் நானும் சூர்யாவும் ரொம்ப ஜோவியலா பேசிட்டு இருப்போம். இந்த படம் நடிச்சிக்கிட்டே தெனாலி படத்துலையும் நடிச்சிட்டு இருந்தேன். ஊட்டில நைட்டு பிரண்ட்ஸ் பட சூட்டிங் முடிஞ்சா காலையில கொடைக்கானல்ல தெனாலி பட சூட்டிங் இருக்கும். 

Advertisment

ஒருமுறை ஃப்ரண்ட்ஸ் பட ஷூட்டிங் முடிஞ்சி தெனாலி படத்துக்கு கிளம்பும்போது சூர்யா, ஜோதிகாவ கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னார். நானும் ஜோதிகாகிட்ட போய் சூர்யா உங்களை கேட்டதா சொன்னேன். உடனே அவங்களும் சூர்யாவ கேட்டதா சொல்லுங்கன்னு சொன்னார். உடனே ரெண்டு பேருக்கும் அவ்ளோ சந்தோஷம். அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேருக்கும் தூது போறதுதான் என் வேலையே. அப்படி காதலை வளர்த்த ஒரு படம் ஃப்ரண்ட்ஸ். இதே போல அமர்க்களம் படத்திலும், ஷாலினியும் அஜித்தும் லவ் பன்னிட்டு இருந்தாங்க. அது எனக்கு தெரியாது. அப்போ அஜித் கிட்ட போய், சினிமாவுல யாரையும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்காதன்னு அட்வைஸ் பண்ணிட்டி இருந்தேன். அதை இயக்குநர் சரண் பார்த்துட்டு என்னை கூப்பிட்டு என்ன பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டார். நான் அஜித்துக்கு இந்த மாதிரி அட்வைஸ் பண்ணன்னு சொன்னேன். அதுக்கு அவர், அடப்பாவி அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவ் பன்னிட்டு இருக்காங்க, அடுத்த மாசன் கல்யாணம், உனக்கு படம் வேணுமா வேணாமான்னு கேட்டார். அதோட நான் வாயை மூடுனவன் தான் அதுக்கப்புறம் நான் பேசவே இல்ல” என்றார்.