தென்னிந்தியாவின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி ஓடிடி எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் 'ராம்போ'வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும்.
ஒரு பாக்ஸரின் வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இப்படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், “முத்தையா சார் கிராமத்துக் கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த முறை அவர் நகர வாழ்க்கை பின்னணியில் ஒரு கதை சொல்ல நினைத்த போது, அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சன் டிவி நெட்வொர்க் தயாரிப்பில் இப்படம் உருவானது எனக்கே பெரும் உற்சாகத்தை அளித்தது” என்றார்.
படத்தில் புதிய முகமாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகியுள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரஞ்சித் சஜீவ் வில்லனாக நடித்துள்ளார். R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.