உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ரம்பா மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து, ரஜினி, கமல், விஜய், பிரசாந்த், சத்யராஜ் மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். ரம்பாவின் நடிப்பு மற்றும் அழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதன் காரணமாகத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார் ரம்பா.
இதையடுத்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, குடும்ப வாழக்கையில் கவனம் செலுத்தி வந்த ரம்பா, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும், அவ்வப்போது சின்னத்திரை அல்லது ஓரிரு படங்களில் தலைகாட்டி வந்தார்.
அந்த வகையில், அவர் கடைசியாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘பெண் சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவை தவிர்த்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த ரம்பா, தற்போது சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய படங்களில் நடிக்க பல்வேறு கதைகளைக் கேட்டுவந்த நிலையில், தற்போது ஓரிரு கதைகளைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் நடிப்பதற்காக உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில், அவர் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us