பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதன் மூன்றாம் பாகத்தையும் தற்போது கைவசம் வைத்துள்ளார். இதனிடையே கடந்தாண்டு தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது மும்பையில் அவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக டாக்டர் பிரசாந்த் என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுயிருந்தார். இது குறித்து தற்போது ரகுல் ப்ரீத் சிங் பேசியுள்ளார். அதாவது அந்த டாக்டர் சொல்வது தவறான தகவல் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோசடி எச்சரிக்கை. இவரைப் போன்றவர்கள் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு எந்தவித உண்மை சரிபார்ப்பும் இல்லாமல் வீடியோக்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்துவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.
பழங்கால மற்றும் நவீன அறிவியலை புரிந்து கொண்ட ஒரு நடிகையாக மக்கள் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கடின உழைப்பின் மூலமும் உடல் எடையை குறைக்கலாம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அதைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இது போன்ற மருத்துவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Follow Us