சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-02-26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் ராஜூ முருகன், “இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக. செவ்வணக்கம் தோழர்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us