திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் இந்திய திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, கே.பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இவர் மட்டுமல்லாது திரை பிரபலங்கள் ரஜினி, கமல், மோகன்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ரஜினி பேசுகையில், “பாக்யராஜை சம்மதித்து இந்த விழாவை நடத்த பூர்ணிமா எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சம் இல்லை. முதல்லயே நீங்க வந்தா தான் இந்த நிகழ்ச்சி நடக்கும் என என்கிட்ட சொல்லிட்டாங்க. கண்டிப்பா வரேன், அவருக்கு வராமலா... அதுவும் 50வது வருஷம்... அப்படின்னு இங்க வந்திருக்கேன். 70களில் மூன்று ராஜாக்கள் தமிழ் சினிமாவுக்கு வந்தாங்க. ஒன்னு இளையராஜா, இன்னொன்னு பாரதிராஜா, அடுத்து பாக்யராஜா. இந்த மூணு பேரும் ஒவ்வொரு துறையில் அரசர்கள். கொடிகட்டி பறந்தாங்க, இன்னுமும் பறந்துட்டு இருக்காங்க. இதுல இளையராஜா இசை மட்டும்தான், பாரதிராஜா திரைக்கதை, டைர்கஷன்... ஆனா நம்ம பாக்யராஜா, கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், ஆக்டிங், அதோடு இசையும் பண்ணியிருக்காங்க. எல்லாருக்கும் தெரியும், அவர் திரைக்கதைல எவ்வளவு வல்லவர்னு, ஒரு கதை நல்லாயிருந்தா கூட திரைக்கதை சரியில்லன்னு சொன்னா, அது எடுபடாது. அதுவே ஒரு கதை சுமாரா இருந்து திரைக்கதை நல்லா இருந்தா, அது ரொம்ப நல்லா போகும். அதனால திரைக்கதை தான் ஒரு சினிமாவுக்கு முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு நம்ம பாக்யராஜ்.
இந்தியாவில் திரைக்கதையில் மன்னர்கள் சலீம்-ஜாவேத். அதுக்கப்புறம் அவங்களுக்கு இணையான ஒரு திரைக்கதை மன்னர் நம்ம பாக்யராஜ். சலீம்-ஜாவேத், ஆக்ஷன் ரீதியாவும் ஆண்கள் ரீதியாவும் பண்ணியிருக்காங்க. ஆனா நம்ம பாக்யராஜ் பெண்கள் ரீதியாவும் அதுல ஹீரோயிஸமும் கொண்டு வந்தாங்க. அது சாதாராண விஷயம் கிடையாது. 70களில் ஸ்ரீதர், பாலசந்தர், கோபாலகிருஷ்ணன் என அனைவரும் பெண்கள் சம்பந்தமான படங்கள் எடுத்திருக்காங்க, அதுல ஹீரோக்களுக்கு பெருசா வேலை இருக்காது. ஆனா அந்த பெண்கள் கதாபாத்திரங்கள்ல சகல நல்ல குணங்களை கொண்டு வந்து மாற்றம் செஞ்சவர் பாக்யராஜ். இவருக்கு முன்னாடி சார்லி சாப்ளின்.
பாக்யராஜின் ஒவ்வொரு படமும் ஒரு புரட்சிகரமாக இருக்கும். அதுல முக்கியமா முந்தானை முடிச்சு படத்துல இண்டர்வல் சமயத்துல ஊர்வசி கேரக்டர், அந்த குழந்தையை தாண்ட சொல்லும் சீன், தியேட்டர்ல ஆடியன்ஸ் ஆடிபோய்ட்டாங்க. அதே போல் அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு எல்லாமே சூப்பர் ஹிட். பாக்யராஜுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, ஊதியம், மரியாதை எதுவுமே அவருக்கு சரியா கிடைக்கல. இதுவே அவர் இந்தியில இருந்திருந்தா, சலீம்-ஜாவேத் இருவருமே தோழ்ல தூக்கி வச்சி பாராட்டும் அளவுக்கு வந்திருப்பார். பொதுவா கிரியேட்டிவ் வேலை செய்றவங்க கதை,கதைன்னு நிஜ வாழ்க்கையை வாழ மறந்துடுவாங்க. அது போலத்தான் பாக்யராஜ். அப்படி இருப்பவங்க பணத்து மேல ஆசைப்படமாட்டாங்க. பாக்யராஜ் எடுத்த படம் வேற மொழியில ரைட்ஸ் வாங்கி அவங்க சம்பாதிச்ச பணத்துக்கு, அவங்க சரியா பாக்யராஜுக்கு கொடுத்திருந்தா போட் க்ளப்-ல 5 வீடும், போயஸ் கார்டன்ல 5 வீடும் வாங்கியிருக்கலாம். அதுக்குள்ள அவர் போகவேயில்ல. அவர் எப்போதுமே யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனசுல என்ன தோனுதோ, அதை பட்டுன்னு சொல்லிடுவார். அதுல உண்மை, நியாயம் இருக்கும். இப்ப வரைக்கும் அவர் ஒருத்தர்கிட்டையும் தப்பா பேசி, அல்லது கோச்சிக்கிட்டோ பார்த்தது கிடையாது.
எம்.ஜி.ஆர், என்னுடைய திரையுலக வாரிசுன்னு பாக்யராஜை சொல்றார் என சொன்னால் எந்த மாதிரி அவர் நேசிச்சிருப்பார். அதுமட்டுமல்ல, அவரே பாக்யராஜ் கல்யாணத்தை முன்நின்னு நடத்தினார். எம்.ஜி.ஆர். இதயத்துல அவ்ளோ ஈஸியா யாரும் போயிட முடியாது. எப்படி அண்ணா இதயத்துல எம்.ஜி.ஆர் போனாரோ, அதே போல் எம்.ஜி.ஆர் இதயத்துல பாக்யராஜ் போயிருக்கார். பாக்யராஜுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சின்னா அது பூர்ணிமா தான். பூர்ணிமாவோடு நான் தங்க மகன் நடிச்சேன். அவங்க பாம்பேல்ல வளர்ந்ததால இந்தியில தான் பேசுவாங்க. டைரக்டர் கிட்ட இங்கிலீஸ்ல பேசுவாங்க. ரொம்ப மரியாதையா இருப்பாங்க. ஜாஸ்தி யார்கிட்டையும் பேச மாட்டாங்க. இவங்க பாக்யராஜை கல்யாணம் பன்னிக்குறாங்கன்னு சொன்னப்போ என்னால நம்ப முடியல. ஏன்னா, பாக்யராஜுக்கு இங்கிலீஷ் வராது, இந்தி சுத்தம். ஆனா ஷூட்டிங் ஸ்பாட்ல, ஒரு நடிகரா, டைரக்டரா, ரைட்டரா அவரை பார்க்கும் போது ஆம்பளைக்கும் அவர் மேல காதல் வரும்.
அன்புள்ள ரஜினிகாந்த் படத்துல 5 நிமிஷத்துல ஒரு சின் எழுதி கொடுத்தாரு. அந்த மாதிரி ஸ்பாட்ல பன்றவங்கள நான் பார்த்தது கிடையாது. 16 வயதிலே படத்துல கமல், ஸ்ரீ தேவி சீனை முதல்ல எடுத்துட்டு தான் கடைசியா நம்மள கூப்பிடுவாங்க. எனக்கு அந்த டைம்ல டயலாக் அவ்ளோ வராது. அப்போ பாக்யராஜ் தான் எனக்கு முழுக்க சொல்லி கொடுத்தார். அந்த படத்துல நான் பேசுன மாடுலேஷன் எல்லாம் 90 சதவீதம் பாக்யராஜ் சொல்லிக் கொடுத்ததுதான். எனக்கு கதையில எதாவது டவுட் வந்துச்சுன்னா, உடனே பாக்யராஜிடம் தான் கேட்பேன். படையப்பா படத்துல நீலாம்பரி கேரக்டர், சம்பந்தமா பாக்யராஜிடம் சொன்னப்போ, இந்த கேரக்டரை சரியா எழுதுன்னா, படம் எங்கையோ போயிடும்னு சொன்னார். அடுத்து பாபா படக் கதை சொன்னப்போ, கமர்ஷியலா எப்படி போகும்னு தெரியாதுன்னு சொன்னார். அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். அவர் ஒரு தீர்க்கதரிஷி. இப்ப மறுபடியும் அவர் டைரக்ட் பண்ணப் போறதா சொன்னார். கண்டிப்பா அந்த படம் ஹிட்டாகும்.
இன்னொரு முக்கியமான நிகழ்வு. அது என் வாழ்கையிலும் பாக்யராஜ் வாழ்க்கையிலும் மறக்க முடியாது. அதுக்காகவும் தான் இந்த விழாவுக்கு நான் வந்திருக்கேன். அதை இளைஞர்களுக்கு தெரியனும்னு ஆசைப்பட்டதால இந்த விழாவுல சொன்னா அது சரியா இருக்கும்னு நினைக்கீரேன். அதாவது 1995ல சிவாஜி சாருக்கு செவாலியே விருது மலேசியாவுல கொடுத்தாங்க. அதுக்காக சென்னை சேப்பாக் மைதானத்துல அவருக்கு திரையுலகமும் அரசும் சேர்ந்து பாராட்டு விழா நடத்துனாங்க. அதுல சிஎம் ஜெயலலிதா சிறப்பு விருந்தினரா கலந்துகிட்டாங்க. அதுல நான் ஜெயலலிதாவா பார்த்து ஆவேஷமா பேசுனேன். எப்போதுமே கோவத்துக்கு ஆயுசு ரொம்ப கம்மி. ஆனா கோவத்துல உதித்த வார்த்தைகளுக்கு ஆயுசு ரொம்ப ஜாஸ்தி. அதனால தான் கோவத்துல வார்த்தைகளை அளந்து பேசனும்னு பெரியவங்க சொல்றாங்க.
அப்படி நான் ஆவேஷமா பேசும் போது, சிஎம்-க்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துனுச்சு. அங்கிருந்தவங்களுக்கு மூஞ்சு மாறிடுச்சு. அப்புறம் ஓபன் ஜீப்ல சிவாஜியை ரசிகர்கள் முன்னாடி வளம் வர ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நான் ஏறுனப்போ விஜய் குமார் வேண்டாம்னு சொன்னார். இதுல என்ன இருக்குன்னு நானும் ஏறிட்டேன். அப்போ போகும்போது சிலர் கல்லால அடிச்சாங்க. பயங்கரா கத்துனாங்க. அப்போ பாட்ஷா படம் ரிலீஸாகி ஹிட்டானதால சில ஃபேன்ஸ், ஆட்டோகிராப் வாங்க வந்தாங்க. அவங்களுக்கு கொடுத்து முடிக்குறதுக்குள்ள எல்லா ஆர்டிஸ்டும் பஸ் ஏறி போயிட்டாங்க. எனக்கு எங்க போறதுன்னு தெரியல. ஒரு குரூப் இங்க வாங்கன்னு சொல்றாங்க, இன்னொரு குரூப் அங்க போங்கன்னு சொல்றாங்க. அதுல சில பேர் தலையில அடிக்கிறாங்க, கிள்ளுறாங்க, திட்டுறாங்க.. அப்போ ஒரு வாய்ஸ் கேட்டுச்சு. யார்னு பார்த்தா நம்ம பாக்யராஜ். பக்கத்துல இருந்த போலீஸ்காரங்க கிட்ட, சத்தம் போட்டு, ஒரு ஆர்டிஸ்கிட்ட இப்படி நடந்துட்டு இருக்காங்க, சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க, ஒழுங்கா அவரை ஜீப்ல அலைச்சிட்டு போய் வீட்ல விடுங்க, இல்லைன்னா உங்கள விடமாட்டேன், மீடியாவுல சொல்லிடுவேன்னு சொன்னார் . உடனே அவங்க பயந்துட்டு என்னை ஜீப்ல அழைச்சிட்டு பேனாங்க. பாதுகாப்பா வீட்டுல விட்டாங்க. இதை என்னால மறக்கவே முடியாது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/473-2026-01-08-12-57-00.jpg)