Advertisment

“ஐயையோ! ஒரு அரை பாட்டில் அடிச்சிட்டு இவரு போட்ட ஆட்டம் இருக்கே...” - இளையராஜாவின் பர்சனலைப் பகிர்ந்த ரஜினி

2

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா இன்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.  துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

Advertisment

இவ்விழாவில் பேசிய இளையராஜா, “இசை உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்துவது தமிழக அரசுதான். சிம்பனிக்குச் செல்லும் முதல் நாள் முதல்வர் வந்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதனை முடிச்சிட்டு திரும்பும்போது அரசு மரியாதையுடன் வரவேற்பும் கொடுக்கிறார்கள். என்னவென்று சொல்வது? வழியனுப்பி வைத்துவிட்டு, வரவேற்கவும் செய்து, இன்று பாராட்டு விழாவும் நடத்துகிறார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. இந்த மேடையில் நான் நிற்கிறேனா? நான் பேசுகிறேனா? என்று கூட தெரியவில்லை,” என உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென ரஜினியைப் பற்றி பேசி அரங்கத்தினரைச் சிரிப்பில் ஆழ்த்தினார்.

 அப்போது இளையராஜா, “இரண்டு நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் போன் பண்ணி, ‘நம்ம பண்ணது எல்லாத்தையும் நான் சொல்லப்போறேன்’னு சொன்னாரு. பெல்பாட்டம் போட்டுக்கிட்டு, தொப்புலுக்கு மேல இழுத்து கட்டிக்கிட்டு, கிராப் வெட்டிக்கிட்டு, பட்டையா ஒரு வாட்ச் மாட்டிக்கிட்டு, ‘நீங்க எப்படி இங்க இருந்து மாறுனீங்க’ன்னு சொல்லப்போறேன்னு சொன்னாரு,” என்றவர் உடனே ரஜினியைப் பார்த்து, “சொல்லீரவா?” என்று கேட்க, அவரும் சிரித்துக்கொண்டே, “சொல்லிரங்க” என்று அசைவு கொடுக்க, மேலும் இளையராஜா பேசியபோது, “நீங்களும், நானும், மகேந்திரனும் சேர்ந்து குடிச்சோம், நியாபகம் இருக்கா உங்களுக்கு?” என்று கேட்டார். “நானும் ‘அப்புறம்’ என்று கேட்டேன், அதற்கு அவர், ‘இல்ல, நீங்க ஒரு அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடுன ஆட்டம் இருக்கு பாருங்க’ன்னு சொன்னாரு. அததான் இந்த மேடையில் சொல்லப்போறேன்னு சொன்னாரு, நான், ‘நீங்க எதுவேனாலும் சொல்லிக்கோங்க, எனக்கு கவலையில்ல’ன்னு சொன்னேன்,” என்று இளையராஜா கூறிக்கொண்டிருந்தார். 

அப்போது உடனே எழுந்து மைக் பக்கத்தில் வந்த ரஜினிகாந்த், “விஜிபில நம்ம ஜானி படம் கம்போஷின் போயிட்டு இருந்துச்சு, அப்போ சூட் முடிச்சிட்டு நானும் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது இவரும் (இளையராஜாவும்), மகேந்திரன் சாரும் அங்கே வந்தாங்க. அன்னைக்கு இரவு நானும் மகேந்திரன் சாரும் டிரிங்க்ஸ் எடுத்தோம், அப்போது இவர்கிட்ட கையை காட்டி, ‘சாமி, அடிக்கலாமா’ன்னு கேட்டோம், அவரும் ‘ம்ம்’ன்னு சொன்னாரு. ஒரு அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே... ஐய்யையோ! 3 மணி வரைக்கும், ‘ராஜா, இந்த சாங்கிதம் இருக்கே’ன்னு மகேந்திரன் சார் சொல்ல, உடனே, ‘சும்மா இருங்க சார்’ என்று சொன்ன இவரு (இளையராஜா), ஊர்ல இருக்க எல்லா கிசுகிசுக்களையும் கேட்கிறார். அதிலும் முக்கியமா ஹீரோக்களோட கிசுகிசுதான் கேட்கிறார். அண்ணன் பெரிய லவ்வு... அதுதான் இந்தப் பாட்டு எல்லாம். அப்படி இருந்தவரு, இப்ப பாருங்க எப்படி இருக்காரு. இன்னும் நிறைய இருக்கு, இன்னொரு முறை அதையெல்லாம் நான் வச்சிக்கிறேன்,” என்று ரஜினி கூறிவிட்டு சென்றார். ஆனால், ரஜினி இளையராஜாவைப் பற்றி கூறக் கூற, அரங்கத்தில் இருந்த முதல்வர் உள்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். மேடையில் இரு ஆளுமைகளும் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது அரங்கத்தில் பெரும் சிரிப்பலையாக வெடித்தது.

mahendran Actor Rajinikanth Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe