ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இடைப்பட்ட காலங்களில் மற்றும் கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் இமயமலை போகாமல் இருந்தார். பின்பு ஜெயிலர் படம் முடிந்ததும் 2023ஆம் ஆண்டு மற்றும் வேட்டையன் படம் முடிந்ததும் கடந்த ஆண்டு இமயமலை போனார். ஆனால் கூலி படம் முடிந்த பிறகு போகவில்லை.
இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் அவர், கடந்த 4ஆம் தேதி முதல் இமயமலை பயணம் மேற்கொண்டார். முதலில் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி பின்பு பத்ரிநாத் சென்றார். பத்ரிநாத் செல்லும் வழியில் சாலையோரம் அவர் நின்று கொண்டு சாப்பிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது பாபாஜி குகைக்கு சென்றுள்ளார். அங்கு போகும் முன் அவருக்கு மகாவதார் பாபாஜி சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின்பு குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார்.
ஜெயிலர் 2 ஜூலையில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கமலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை.