சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நல்லகண்ணுஅதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த், “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர். நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us