தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை தயாரித்தவர். எப்போது கைகளைக் கட்டுக்கொண்டு பணிவுடனும் நட்போடும் பழகக்கூடியவர். இவர் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நேற்று தான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அடுத்த நாளே உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏவிஎம் சரவணனின் உடல் ஏவிஎம் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் காலை 7 மணி முதல் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏவிஎம் சரவணன் மிகப் பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எப்போதும் வெள்ளை டிரஸ் போட்டிருப்பார். அதே போல அவர் உள்ளமும் வெள்ளையாக இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். பத்து நிமிடம் அவரிடம் பேசினால் அப்பாச்சி அப்பாச்சி என அவரது தந்தையை நினைவு கூறுவார். என்மேல் மிகுந்த அன்பு வைத்திருப்பவர். என்னுடன் நலம் விரும்பியும் கூட. என்னுடைய கஷ்ட காலங்களில் துணையாக நின்றவர்.
ஏவிஎம் நிறுவனத்தில் நான் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அந்த ஒன்பது படங்களுமே பெரிய ஹிட். அதற்கு முக்கிய காரணம் சரவணன் சார் என்றால் அது மிகை ஆகாது. 80களில் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை, அதேபோல் 20களில் பிரம்மாண பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் சிவாஜி. அப்படிப்பட்ட பொருட்செலவில் இப்போதும் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க நினைத்தார். அது நடக்காமலே போய்விட்டது. அவருடைய மறைவு என் மனதை மிகவும் பாதிக்கிறது” என்றார்.
Follow Us