மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் நடக்கும் சாதிய பிரச்சனைகளையும் பேசியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இதனிடையே இப்படம் தெலுங்கில் வருகின்ற 24ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது பைசன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சூப்பர் மாரி சூப்பர், பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என ரஜினிக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய ரஜினிக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.