தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். இதையடுத்து இருவரும் 47 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க திட்டமிட்டனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை.
இதையடுத்து படத்தின் இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் நெல்சன் இறுதி செய்யப்பட்டதாகவும் படத்தின் ப்ரோமோ ஷூட் சென்னையில் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரஜினி, கமல் இருவரும் இணையும் பட அறிவிப்பை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அடுத்த அப்டேட் இன்று நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவித்தது. அதன்படி அப்டேட் வெளியாகியது. படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என தெரிவித்தது. மேலும் ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் எனவும் தெரிவித்து ரஜினி மற்றும் கமல் கைகள் மட்டும் இருக்கும் போஸ்டரை வெளியிட்டது. இதனால் இந்த ப்ரோமோவை ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் அடுத்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் வெளியாகும் அதே 12.07 மணி நேரத்தில் குறிப்பிட்ட திரையரங்குகளிலும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான டிக்கெட் புக்கிங்கும் ஓபன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி மற்றும் கமலை 47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதே போல் சிம்புவின் அரசன் படத்தின் ப்ரோமோவும் ஆன்லைன் மற்றும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் திரையரங்குகளில் ஆன்லைனுக்கு முந்தைய நாள் மாலையே வெளியாகியிருந்தது. ஒரே நேரத்தில் வெளியாகவில்லை.
Follow Us