ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டான நிலையில் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார். இதற்கான இயக்குநர் தேடுதலும் நடந்து வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் ரஜினியின் 75வது பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ படம் ரீ ரிலிஸாகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக ரஜினி, படம் குறித்து தனது சுவாரசியமான அனுபவங்களை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஏகப்பட்ட விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

Advertisment

அப்போது சிவாஜி குறித்து பேசிய அவர், “என்னுடைய அப்பா கதாபாத்திரத்திற்கு சிவாஜி சார் சரியாக இருப்பார் என சொன்னேன். கே எஸ் ரவிக்குமார் வேண்டாம் என சொல்லிவிட்டார். அப்பா கதாபாத்திரத்திற்கு மொத்தம் இருப்பதே நான்கு சீன்-தான், அதில் சிவாஜி சாரை நடிக்க வைத்தால் ஆடியன்ஸ் ஏமாந்து விடுவார்கள் என்றார். ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். அதனால் அவரை சிவாஜி சாரிடம் கதை சொன்ன அனுப்பினேன். அவருக்கும் கதை பிடித்து விட்டது. ஆனால் அவர் சம்பளம் அதிகமாக கேட்டார். இதில் கே எஸ் ரவிக்குமாருக்கு உடன்பாடில்லை, குறைந்த நாளுக்கு இவ்வளவு சம்பளமா என யோசித்தார். ஆனால் நான் அதை சிவாஜி சாரை அணுகுவதற்கு முன்பாக யோசித்திருக்க வேண்டும், அவரிடம் சென்று கதை சொல்லி ஓகே வாங்கி விட்டு சம்பளத்திற்காக அவரை வேண்டாம் என்று சொன்னால் நம்மை விட கேவலமானவர்கள் யாரும் இருக்க முடியாது என சொல்லி அடுத்த நாளே அவர் கேட்ட முழு சம்பளத்தை ஒரே செட்டில்மெண்டாக நேரில் சென்று அவரது காலடியில் வைத்தேன். 

படப்பிடிப்பில் சொத்து பிரிக்கும் காட்சியை படமாக்கும் போது சிவாஜி சார், அவரது மேக்கப் ரூமில் டயலாக மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தார். உடனே நான் என்ன சார் ஆறு லைன் உள்ள வசனத்தை ஏன்  மனப்பாடம் பண்ணுறீங்கன்னு கேட்டேன். அதற்கு அவர், இல்ல ரஜினி மணிவண்ணன் இருக்கான்ல, அவன் தூள் கிளப்புகிறான்... அவனை விடக்கூடாதுன்னு சொன்னார். எனக்கு இந்த வயதில் இப்படி ஒரு ஆர்வமா என வியந்து போனேன். அதன் பிறகு மைசூரில் அந்த கோயில் செட் போட்டோம். இப்போதிருக்கும் டெக்னாலஜியில் கூட்டத்தை சுலபமாக அதிகரித்து காட்டிவிடலாம். ஆனால் அப்போது நிஜமான கூட்டத்தை கூட்ட வேண்டும். கிட்டத்தட்ட 4000 பேரை லாரியில் அழைத்து வந்தோம். சென்னையில் மைசூரு வர சிவாஜி சாருக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அவர் நிராகரித்து விட்டு காரில் வந்தார். 

Advertisment

பின்பு கல்யாண சீன் எடுக்கும் போது அவருக்கு குறைந்தது சின்ன வசனம் தான். ஆனால் அதை அவருக்கு பின்னாடி இருந்து எடுத்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் ஆச்சரியமாக பார்த்தேன். அவரிடம் இதை கேட்டபோது சுத்தி 4 ஆயிரம் பேர் இருக்குறாங்க. ஏதாவது வசனம் மிஸ் ஆச்சுன்னா ஒரு மாதிரி பேசுவாங்க. அதனால் தான் பிராம்ப்ட் என்றார். அதாவது ஆயிரம் அடி ரீல் அளவுக்கு ஒரே ஷாட்டில் வசனம் பேசிய மனிதர் இப்போது குறைந்த வசனத்திற்கு பிராம்ப்ட் கேட்கிறார்... முதுமை என்பது எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள். ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என்னைப் பார்த்து நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என கற்றுக் கொண்டதாக சொன்னார். நான் இமயமலை போவதையும் இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிப்பதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார். அது எனக்கு அவரிடம் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அதன் பிறகு ஒரு நாள் என்னிடம் வந்து டேய் நான் செத்துப் போயிட்டா என் பாடி கூட  மயானம் வரை நீ வருவியா டானு கேட்டார். சார் என்ன இப்படியெல்லாம் பேசுறீங்கன்னு சொன்னேன். ஆமாண்டா நானும் மனுஷன் தானே எனக்கும் வயசாகிடுச்சுன்னு சொன்னார். கண்டிப்பா வருவேன்னு சொன்னேன். அதே போல அவரது பாடியுடன் வீட்டில் இருந்து மயானம் வரை சென்றேன். இதுவரை நான் எந்த பாடி கூடவும் சென்றதில்லை” என்றார்.