ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டான நிலையில் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார். இதற்கான இயக்குநர் தேடுதலும் நடந்து வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் ரஜினியின் 75வது பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ படம் ரீ ரிலிஸாகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக ரஜினி, படம் குறித்து தனது சுவாரசியமான அனுபவங்களை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஏகப்பட்ட விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

Advertisment

முதலில் படம் உருவான விதம் குறித்து பேசிய அவர், “எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து முழு படம் எடுக்க வேண்டும் என எனக்கு நீண்ட நாள் யோசனை. அதுதான் படையப்பாவாக மாறியது” என்றார். பின்பு படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து பேசிய அவர், “நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யாராய் தான் பொருத்தமாக இருப்பார்... அவர்தான் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதில் விடாப்பிடியாகவும் இருந்தேன். அதனால் ஐஸ்வர்யாராயிடம் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம். நெருங்க முடியவில்லை. 

படம் பொறுத்தவரை இந்த கதாபாத்திரம் ஹிட்டானால் தான் படம் ஹிட், இல்லையென்றால் ஒன்றும் இல்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த கதாபாத்திரம் பண்ண விருப்பம் இல்லை என பின்பு தெரிந்தது. அதனால் அவரை விட்டுவிட்டு வேறு ஆட்களை தேடினோம். அப்போது ஸ்ரீதேவி, மீனா, மாதிரி தீக்‌ஷித் என ஏகப்பட்ட நடிகைகளை யோசித்துப் பார்த்தோம். அவர்கள் யாருக்கும் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ஏற்ற திமிர், ஆணவம் போன்ற விஷயங்கள் இல்லை. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனை சொன்னார்கள். அவருடன் படிக்காதவன் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அவருடைய படங்களை நான் பார்த்ததில்லை. பின்பு அவருடைய போட்டோ அனுப்பினார்கள். அவரை லிப்டில் நேரில் பார்த்தேன். அவருடைய கண் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்தது. ஆனாலும் எனக்கு அரை மனதாக தான் இருந்தது. பின்பு நீலாம்பரி கதாபாத்திரமாக அவர் மேக்கப் போட்டு வந்து நின்றபோது எனக்கு முழு மனதாக மாறிவிட்டது” என்றார். 

Advertisment