இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் பேனரில் கே.எல். நாராயணா தயாரிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முதலில் ஒடிசாவில் துவங்கியது. தொடர்ந்து கென்யா நாட்டில் நடக்கவுள்ளது. சமீபத்தில் படத்தின் பிரித்விராஜ் லுக் வெளியானது, தொடர்ந்து பிரியங்கா சோப்ரா லுக் வெளியானது. இதனிடையே க்ளோம் ட்ரோட்டர் என்ற பெயரில் ஒரு பாடல் வெளியாகியிருந்தது. இப்பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருக்க ஆஸ்கர் வென்ற மற்ற ராஜமௌலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாளான நவம்பர் 15ஆம் தேதி ‘க்ளோம் ட்ரோட்டர்(Globe Trotter)’ என்ற தலைப்பில் ஹைதரபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு நிகழ்வு நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக ராஜமௌலி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முதலில் இது டிக்கெட் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு திறந்த நிகழ்ச்சி எனவும் அதற்கான டிக்கெட்டுகள் இருப்பதாகவும் சிலர் ஆன்லைனில் கூறி வருவதை பார்த்தேன். அதை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் டிக்கெட்டுகளில் ஒரு கியூ ஆர் கோடு இருக்கும், அதை ஸ்கேன் செய்தால் நிகழ்வுக்கு எப்படி வரலாம் என தெரிந்து கொள்ளலாம். நிகழ்வுக்கு பெரியோர்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வர வேண்டாம். அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சமீப காலங்களில் நடந்து வரும் கூட்ட நெரிசல் சமப்வக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Follow Us