அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி.
உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படித்தான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ‘உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று. வாய்ப்பிற்கு நன்றி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/06-29-2026-02-24-17-35-08.jpg)