கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளது. ரஜினியின் 173வது படமாக இப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குநராக கமிட்டாகியிருந்த சுந்தர் சி திடீரென வெளியேறியதால் அவருக்கு பதில் வேறு இயக்குநரை தற்போது தயாரிப்பு நிறுவனம் தேடி வருகிறது. இப்படத்தில் புதியவருக்கும் வாய்ப்புண்டு என கமல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனால் புது இயக்குநர்களுக்கும் கதை சொல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் இந்நிறுவனம் சார்பில் ஒரு எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us