அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான புஷ்பா 2 பட சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் வெளியானது. ஆனால் அதற்கு முந்தைய நாள் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
அதில் அல்லு அர்ஜுனின் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அங்கு திடீரென அல்லு அர்ஜுன் சென்றதால் அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்தார். இப்போதும் அவர் குறித்த அப்டேட் சரியாக வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அல்லு அர்ஜுனை அதிரடியாக கைது செய்தனர். பின்பு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் கைதான மறுநாளே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்த வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் சந்தியா திரையரங்க நிர்வாகம் முதல் குற்றவாளியாகவும் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து மொத்தம் 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Follow Us