மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆகஸ்டில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 

Advertisment

குறுகிய நாட்களிலே ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு இந்திய படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இப்போது மலையாளத் திரையுலகிலே அதிக வசூலித்த படமாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்படுகிறது. முதல் பாகம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது.  

Advertisment

இதனிடையே இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டிருந்தது. அங்கும் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தெலுங்கில் இப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் நாக வம்சி, இப்படம் நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் தோல்வியடைந்திருக்கும் என சொல்லியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “லோகா படம் தெலுங்கில் நேரடியாக உருவாகியிருந்தால் மக்கள் அதை விமர்சனம் செய்ய எண்ணற்ற வழிகளை கண்டுபிடித்திருப்பார்கள். கதை சொல்லலில் போதிய வேகம் இல்லை எனவும் சொல்லியிருப்பார்கள். படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். 

14 (1)

இன்றைய காலத்தில் மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் சொல்ல முடியாது. உதாரணமாக, லிட்டில் ஹார்ட்ஸ் என்ற படம் வெளியானது. அதில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை, இயக்குனர் யார் என்றே யாருக்கும் தெரியாது. இருப்பினும் பிரீமியர் ஷோக்கள் அந்த படத்துடன் வெளியான பெரிய நட்சத்திர படங்களை விட மிகப் பெரிய ஓபனிங் கிடைத்தது” என்றுள்ளார். இவர் ரவி தேஜா நடித்த ‘மாஸ் ஜாத்ரா’ படத்தை தயாரித்துள்ளார். அப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் புரொமோஷன் பேட்டிகளில் இதனை தெரிவித்துள்ளார். மலையாளத் திரையுலகில் அதிக வசூலித்த படத்தை நாக வம்சி இப்படி விமர்சித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment