தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன், கடைசியாக ஆந்திர துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓஜி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடந்த ஆண்டு வெளியான ரவி மோகனின் ‘பிரதர்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்தாண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.
இப்படங்களைத் தொடர்ந்து தற்போது கவினுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே அவர், டவலுடன் கவர்ச்சியாக இருப்பது போலான புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலானது. இது தற்போது போலியானவை என பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் சில ஏஐ புகைப்படங்கள் பரவி வருகிறது. தயவுசெய்து அந்த போலி புகைப்படங்களை பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். ஏஐ என்பது நெறிமுறைகள் கூடிய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிற தவறான தகவல்களுக்கு அல்ல. நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்” என்றார்.