சமீபத்தில் நடிகை கௌரி கிஷன் தொடர்பாக ஒரு யூடியூபர் உருவக்கேலி கேள்வி கேட்ட விவகாரம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கௌரி கிஷன் நடித்த அதர்ஸ் பட செய்தியாளர்கள் சந்திப்பில் நாயகனிடம், ‘ஒரு பாடலுக்கு நாயகி கௌரி கிஷனை தூக்கீனீங்களே அவங்க எவ்ளோ வெயிட் இருந்தாங்க’ எனக அவர் கேட்டிருந்தார். இதனால் பாதிப்படைந்த கௌரி கிஷன் அதற்கடுத்து நடந்த மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் அந்த யூடிபரிடம் “எதுக்கு அப்படி கேள்வி கேட்டீங்க. அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்...’ என கேள்விகளை அடுக்கினார். ஆனால் அந்த யூடியூபர் தன் கேள்வியை நியாயப்படுத்தி கடினமான குரலில் எதிர் விவாதம் செய்தார்.. 

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக அந்த யூடியூபரைக் கண்டித்து கௌரி கிஷனுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் என பலரும் தங்களது கருத்தை பதிவிட்டனர். இதையடுத்து அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் இதை கௌரி கிஷன் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல என கூறி அவர் தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பிரியா ஆனந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ரொம்ப காலமா நடந்துகிட்டு இருக்கு. அவர எனக்கு முன்னாடியே தெரியும். அவருக்கும் எனக்குமே நிறைய பிரச்சனை நடந்திருக்கு. முதல்ல அவர் அப்படி கேட்டு இருக்கவே கூடாது. அவரை இத்தனை நாள் பத்திரிக்கையாளரா அனுமதிச்சதே பெரிய விஷயம். நமக்கு கிடைத்த வேலையை முதலில் நாம் மதிக்க வேண்டும். நீங்களும் இந்த வேலையை ரசிச்சு தான் செய்றீங்க. இதன் மூலமாத்தான் குடும்பத்தை பார்த்துகுறீங்க. அதனால இது விளையாட்டு விஷயம் அல்ல. கேள்விகள் கேட்கலாம். ஆனா அது ஆபாசமா போகும் போதுதான் பிரச்சனையாக மாறுகிறது” என்றார்.