சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தில் அனிமல் படத்தில் நடித்த திரிப்தி டிம்ரி, விவேக் ஆனந்த் ஓபராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். குல்சன் குமார் மற்றும் டி சீரிஸ் நிறுவனம் இணைந்து வழங்குகின்றது. 

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் பிரபாஸ், தன் உடலில் காயத்துடன் சில இடங்களில் கட்டுக் கட்டி சிகரெட் வாயில் வைத்தபடி நின்று கொண்டிருந்தார். அவருக்கு சிகரட்டில் லைட்டர் பற்றவைத்து உதவும்படி திரிப்தி டிம்ரி, நின்று கொண்டிருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகள் உட்பட மொத்தம் எட்டு மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் அதற்குக் காரணம் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை தற்போது பிரகாஷ்ராஜ் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விஷமத்தனமான போலி செய்திகளை பரப்புபவர்களே... ஸ்பிரிட் படத்தில் என்னுடைய காட்சிகளை இன்னும் படமாக்கவே தொடங்கவில்லை. ஆனால் நீங்கள் வாட்ஸ் அப் தொழிற்சாலைகள் கதைகளை யூகிக்கிறீர்கள். முதிர்ச்சி அடையுங்கள், வாழ்க்கையை வாழுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.