1990கள் முதல் இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் . இந்த நிலையில், கேரளாவின் கோழிக்கூட்டில் இலக்கியத் திருவிழா ஜனவரி 22 அன்று தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெற்று வந்தது. இந்த விழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தி சினிமாக்கள் குறித்து தனது கவலைகளைப் பதிவு செய்தார். மேலும், தென்னிந்திய சினிமாக்கள் குறித்தும் தனது பார்வையை முன் வைத்தார்.
அவர் பேசியதாவது, “இந்தி சினிமாக்கள் தற்போது அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. பாலிவுட் சினிமாக்கள் தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சிலைகளைப் போல் இருக்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால், அவற்றிற்கு உயிர் இருக்காது, உணர்வுகள் இருக்காது. அதைப்போலத் தான் இன்றைய பாலிவுட் சினிமாவும் இருக்கிறது. ஆடம்பர செட்கள், பெரிய அளவிலான பட்ஜெட்கள் போன்ற கவர்ச்சிகரான செயல்களின் மூலமாகப் பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வம் கட்டிவருகின்ற. இதனால், இந்தி சினிமாக்களில் கதைகளுக்கோ மக்களின் உணர்வுகளுக்கோ முக்கியத்துவம் அளிப்படுவதில்லை. இது பெரும் வேதனையான ஒன்றாக உள்ளது.
ஆனால், தென்னிந்திய சினிமாக்கள் அப்படியல்ல, அவை சாதாரண மக்களின் வாழ்க்கை முறை மற்றும் மண்சார்ந்த கதைகளைப் பேசுகின்றன. குறிப்பாகத் தமிழ், மலையாளம் உள்ளிட்டத் திரைப்படங்கள் தங்கள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. அவைகள் தங்கள் மக்களின் வாழ்க்கையையும், பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கின்றன. நமது கதைகள் நமது மண்வாசனையோடு இருக்க வேண்டும், நமது வேர்களைப் பற்றிப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு மேலோட்டமான கவர்ச்சியை நம்பி மட்டுமே படமெடுக்கும் பட்சத்தில் மக்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்” என்று கூறியிருந்தார்.
Follow Us