அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
படக்குழுவினரை ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி அஷ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “செல்ஃப் மேட் ஸ்டாருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. நண்பர்கள் வேலைக்காக ஒன்று சேரும் போது அதில் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதுதான் எங்களை வளர செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன், “நண்பனிலிருந்து இயக்குநராக மாறியதற்கு சிறிது நேரம் எடுத்தது. ஆனால் இப்போது இரண்டிலும் சிறந்ததை நான் பெற்றுள்ளேன்” என அஷ்வத் மாரிமுத்து குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் 2 டிராகன் பொம்பையை பகிர்ந்து விரைவில் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் டிராகன் 2 உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஏஜிஎஸ் - அஷ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் மூவரும் ஒரு புதுப்படத்திற்கு கமிட்டாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us