கும்கி பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கிமுடித்துள்ளார் பிரபு சாலமன். இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தவல் காடா தயாரிப்பில் பென் ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பிரபு சாலமன், “இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது. இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்து குலுங்கி போனது.
அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள். இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி சார் மற்றும் ஜெயந்திலால் காடா சார் தான்.
முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம்.
எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது. தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள். டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.
படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/05-2-2025-11-07-19-40-33.jpg)