பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்பு சீவி’. இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார். உசிலம்பட்டி பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இப்படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பொன்ராம், “மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

Advertisment

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன். இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.

அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல். இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால்.  இதில் தான் 'ரொக்க புலி' என சரத் சாரும், 'பாண்டி' என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.

Advertisment

யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி. சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா. சண்முக பாண்டியன் இந்தப் படத்தில்  நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம்.  அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'படைத்தலைவன்' படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த  திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

முதலில்பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.