நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் விழா இன்று (12.12.2025) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு, அவரது  ரசிகர்களும், திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். 

Advertisment

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தளப்பதிவில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம். ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.