விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில் இருந்தே இப்படம் மத வெறுப்பைத் தூண்டுவதாக அமைந்துள்ளதாக சர்ச்சையானது.
தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து இப்படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்களம் உட்பட பல மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இதில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மன்னன் ஷா இசையமைத்துள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் மூன்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு மூன்று இந்திய பெண்களை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய கட்டாயபடுத்துவதாகவும் அதற்காக அவர்களை கொடூரமாக நடத்துவதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது பல தரப்பு மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் வெளிப்படையாக மதவெறுப்பை தூண்டுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெறுப்பை தூண்டும் தி கேரளா ஸ்டோரி படத்தின் அடுத்த பாகம் வெளியாவது தொடர்பான தகவல்களை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். முதல் பாகத்தின் போதே வகுப்புவாத பிரச்சாரம் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா இந்த முறையும் நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிப்பதை மீண்டும் நிராகரிக்கும். வகுப்புவாத மோதலை தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு எந்த தடங்களும் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன? அதே நேரத்தில் கலையின் மீதான விமர்சனத்தை எவ்வாறு வெளிப்படையாக தெரியாமல் வைக்கப்படுகிறது? இது அதிர்ச்சியளிக்கிறது. நமது நல்லிணக்க நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளுக்கு நாம் எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us