அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.
ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடித்திருக்கிறார். டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் வரும் அக்-31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்,ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.
நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் விரும்புவதும் பேசுவதும் எல்லாமே பாசிட்டிவ் தான். இவரைப்போன்றவர்கள் வெற்றி பெற்றால் தான் புது புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பசங்க தானே என்று குறைவாக எடை போட்டு விடக்கூடாது. காக்கா முட்டை படம் தங்க முட்டையாக மாறியது. பசங்க படம் சூப்பர் ஹிட் ஆனது. கோலி சோடா அதுவும் மிகப்பெரிய ஹிட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. மூன்று பசங்களை மையப்படுத்தி படம் எடுப்பது பெரிய விஷயம். அதுதான் திறமை. சிறிய பட்ஜெட்டில் நல்ல கதை அம்சத்துடன் வரும் படங்கள்தான் என்றும் நிலைத்து நிற்கும்.
சமூகத்தில் எல்லா மதமும் ஒன்றுதான். எம்மதமும் சம்மதம் என்று சொல்வதே அதிசயமாக போய்விட்டது. இன்று திரையரங்குகளுக்கு மக்கள் வருவதே அபூர்வமாகிவிட்டது. அதனால் இரண்டரை மணி நேரம் திரைப்படத்தில் என்ன சொல்கிறோம் என்பதை இரண்டு நிமிட டிரைலரில் காட்டவேண்டிய சூழ்நிலை இன்று இருக்கிறது. டிரைலரை பார்த்ததுமே படம் பார்க்க தோண வேண்டும். சிறிய படங்களுக்கு டிரைலர் ரொம்பவே முக்கியம். அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் படம் பார்க்க தூண்டுகோலாக இருக்கிறது.
சினிமாவில் ஒரு நடிகர் ஜெயித்தால் அவர் எந்த மதம் என்று பார்ப்பதில்லை. அவர் நடிப்பு பிடித்திருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். இன்று பாலிவட்டில் கோலோச்சும் அமீர்கான், ஷாருக் கான், சல்மான்கான் போன்றவர்களுக்கு எல்லா மதத்திலும் ரசிகர்கள் இருப்பதால்தான் அவர்களால் சூப்பர் ஸ்டார்களாக கோலாச்ச முடிகிறது. இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகம் பேசினாலும் நடிகர் கமல்ஹாசன் நாத்திகம் பேசினாலும் இங்கே எல்லா மதத்திலும் அவர்களது நடிப்புக்காகவே ரசிகர்கள் இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதே சினிமாவில் தான் இருக்கிறது. அரசியலில் இல்லை. பிளவை உண்டாக்கி பிழைப்பு நடத்துவது அரசியல்வாதிகள் தான். சினிமாக்காரர்கள் எவ்வளவோ மேல்” என்று பேசினார்.