கே .ஆர். வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.  கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்வில் இயக்குநர் இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத்  தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி ,ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும். 

ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே. பாலச்சந்தர், டி ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்” என்றார்.

Advertisment