சென்னை திருத்தணியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகர சம்பவம், தமிழ் நாடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கியுள்ளது. திருத்தணியில் ஓடும் ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அத்துமீறி இருக்கின்றனர். அதை அந்த இளைஞர் விரும்பாத நிலையில், ரயில் நின்றவுடன் போதையில் இருந்த நான்கு பேரும் அந்த இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞரை சுற்றியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த விஷயம் தீயாய் பரவிய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, பிறந்த ஊரை விட்டு பிழைப்பிற்காக வந்துள்ள தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை அனைவரும் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குநர் பேரரசு கூறுகையில், “திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் ஒரு காரணம்.தற்போது இருக்கும் சில திரைப்படங்களில் வன்முறை... வன்முறை... வன்முறை... சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் இருக்க வேண்டும்” என்றுள்ளார்.
Follow Us