விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில் இருந்தே இப்படம் மத வெறுப்பைத் தூண்டுவதாக சர்ச்சையானது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்களம் உட்பட பல மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/11-51-2026-02-23-19-08-04.jpg)
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இதில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மன்னன் ஷா இசையமைத்துள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் மூன்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு மூன்று இந்திய பெண்களை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய கட்டாயபடுத்துவதாகவும் அதற்காக அவர்களை கொடூரமாக நடத்துவதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது பல தரப்பு மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் வெளிப்படையாக மதவெறுப்பை தூண்டுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கேரளா மீண்டும் எதிர்க்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் இதை ஒன்றாக நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அவங்க மறுபடியும் அவங்களோட பிரச்சாரத்தோட வந்துட்டாங்க. அவங்க எப்பவும் வளர மாட்டாங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us