கருரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்திய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகிறது. 

Advertisment

ஏற்கனவே தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் ஜாமீன் கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரும் தற்போது தலைமைறைவாக இருக்கின்றனர். இதனிடையே தவெக-வின் மற்றொரு நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு பின்பு நீக்கியது தொடர்பாக அவரும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து பலரும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உண்மை வெளியே வர வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உண்மை எங்கே இருக்கிறது. பேச்சு சுதந்திரம் இருக்கிறதா? உண்மை வெற்றி பெறும்போது மறைப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் காலம் கடந்து சென்ற பிறகு உண்மை சிதைந்துவிடும். கரூர் சம்பவத்தை பயமின்றி உரக்கப் பேச வேண்டும். யார் தவறு செய்தாலும் உண்மை வெளிவர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

Advertisment