பிரபல மலையாள நடிகை பார்வதி கடைசியாக ‘ஹெர்’(Her) படத்தில் நடித்திருந்தார். தமிழில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இரண்டு மலையாளப் படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சமிபத்திய நேர்காணலில் தனக்கு சிறுவயதில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசியதாவது, “நான் சிறுவயதாக இருக்கும் போது, ஒரு முறை பெற்றோருடன் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, திடீரென ஒருவர், என் மார்பில் தொட்டு விட்டு ஒடிவிட்டார். அது வெறும் தொட்டது போல் இல்லை, பலமாக அடித்தது போல் இருந்தது. அது பயங்கர வலியை கொடுத்தது. குழந்தையாக இருந்ததால், என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அந்த பயமும் அதிர்ச்சியும் மன வேதனையும் தொடர்ந்து நீடித்தது” என்றார்.
பின்பு அதே நேர்காணலில் மரியான் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சிரமத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “படப்பிடிப்பின் முதல் நாளிலே முழுவதுமாக தண்ணீரில் நனைந்தபடி, கதாநாயகனுடன் காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் என் மேல் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தார்கள். அப்போது என்னிடம் மாற்று உடை எதுவும் இல்லை, என்னுடைய தேவை​களைக் கவனித்துக்கொள்ள அங்கும் யாரும் இல்​லை. ஒரு கட்டத்தில் நான் ஹோட்டலுக்கு சென்று உடை மாற்றிவிட்டு வருகிறேன் என படக்குழுவிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் அதற்கு நேரமில்லை என மறுத்துவிட்டனர். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. சத்தமாக, எனக்கு மாதவிடாய் வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை” என்றார். 2013ஆம் ஆண்டு வெளியான மரியான் படத்தை பரத் பாலா இயக்கியிருக்க தனுஷ் நயகனாக நடித்திருந்தார்.
Follow Us